எக்ஸ் வீடியோஸ் – விமர்சனம்

ஆபாச இணையதளங்களின் வெறிக்கு சாமானிய மக்கள் எப்படி இரையாக்கப்படுகிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக உணர்த்தும் படம் ‘எக்ஸ் வீடியோஸ்’.

நடிகர்கள் – அஜ்யராஜ், அக்ரித்தி சிங், ரியாமிக்கா, விஷ்வா, ஷான், பிரபுஜித், பிரசன்னா ஷெட்டி, நிஜய், அர்ஜூன், அபிஷேக், மகேஷ் மது மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் – சஜோ சுந்தர், தயாரிப்பு – கலர் ஷெடோஷ்ஸ் என்டர்டெயின்மென்ட் அஜிதா சஜோ, இசை – ஜோஹன்,

ஒளிப்பதிவு – வின்சென்ட் அமல்ராஜ்,

படத்தொகுப்பு – ஆனந்தலிங்க குமார், கலை இயக்குனர் – கே.கதிர்

படத்தின் கதாநாயகன் மனோஜ்(அஜ்யராஜ்) ஒரு பத்திரிகை நிருபர். ஆபாச இணையதளங்களை தடை செய்வது பற்றி மக்களிடம் கருத்து கேட்கிறார். அப்போது ஒருவர் ‘முதலில் அந்த இணையதளங்களை பார்த்துவிட்டு, பின்னர் கருத்து கேட்க வா’ என்று கூற, ஆபாச இணையதளங்களை பார்க்கும் நாயகனுக்கு அதிர்ச்சி. தனது நண்பன் அங்கித் (பிரசன்னா ஷெட்டி) மனைவி திருப்தியின் (அக்ரித்தி) நிர்வாண வீடியோ ஒரு இணையதளத்தில் இருக்கிறது. இதையடுத்து தனது மற்றொரு நண்பனான டேனியுடன் சேர்ந்து (நிஜய்) அங்கித்திடம் விஷயத்தை கூறுகிறார். மனைவி எவ்வளவு மறுத்தும், அவளது இளமையை எப்போதும் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தான் அந்த வீடியோவை எடுத்ததாகக் கூறி கதறுகிறார் அங்கித். தனக்கு தெரியாமல் எப்படி அந்த வீடியோ வெளியே வந்தது என குழம்பி, மனமுடைந்துபோகும் அங்கித் தற்கொலை செய்துகொள்கிறார். நண்பனின் மரணத்தால் பாதிக்கப்படும் மனோஜும், டேனியும் போலீஸ் அதிகாரி இம்ரானுடன் (ஷான்) இணைந்து, அந்த வீடியோ எப்படி ஆபாச தளத்தில் பதிவிடப்பட்டது என துப்பறிய கிளம்புகிறார்கள். அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அடையும் தகவல்கள்.

மென்பொறியாளர்களான விக்ரம் (பிரபுஜித்) தலைமையிலான ஐவர் கூட்டணி தான் அந்த ஆபாச இணையதளத்தை நடத்துகிறது என கண்டுபிடிக்கிறார் மனோஜ். கோடிக்கணக்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி பிறரின் அந்தரங்கத்தை வெளியிட்டு வாழ்க்கையை அழிக்கும் அந்த ஐவர் கூட்டணியை, மனோஜ் எப்படி மடக்கிப் பிடிக்கிறார் என்பது மீதிக்கதை.

முதல் படத்திலேயே ஒரு சமூக பிரச்சினையை கையில் எடுத்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர். இன்றைய ஸ்மார்ட் போன் உலகில், பர்சனல் என எதுவும் இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சாமான்ய மக்களின் சின்ன சின்ன பலவீனங்களை பயன்படுத்தி, சைபர் கொள்ளையர்கள் எப்படி பணம் பறிக்கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கும் சஜோவுக்கு பாராட்டுகள்.

கபாலி விஷ்வாவை தவிர, ஹீரோ மனோஜ் உள்பட படத்தில் நடித்திருக்கும் அனைவருமே புதுமுகங்கள். ஆனால் பல ஆண்டுகளாக திரைத்துறையில் பயணித்தவர்கள் போல் முதிர்ச்சியுடன் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக வில்லனாக வரும் பிரபுஜித், அந்த பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அக்ரித்தி மற்றும் ரியாமிக்காவின் நடிப்பும் பிரமாதம்.

படத்தில் பாடல்கள் இல்லை. அதனால் தனக்கு கிடைத்த பின்னணி இசைக்கோர்ப்பு வேலையை சரியாக செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜோஹன். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லாமே ஓ.கே. தான்.

படத்தின் நீளம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவுதான். ஆனால் அதில் இருக்கும் நீலம் அதிகம். ஆபாச வீடியோக்கள் மற்றும் இணையதளங்களை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தோடு எடுக்கப்பட்டு இருக்கும் படத்தில், ஏன் இத்தனை ஆபாசக் காட்சிகள் என தெரியவில்லை. பெண்களை ஆண்களின் இச்சைக்கான ஒரு செக்ஸ் மெட்டீரியலாக மட்டுமே காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். அதேபோல படத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகள் இருப்பதால் ஒரே உணர்வுடன் படம் பார்க்க முடியவில்லை.

இணைய உலகின் மூலம் மற்றவர் வீட்டு பெட்ரூமை எட்டிப்பார்க்க துடிக்கும் ஒருவருக்கு, தன் வீட்டில் அது நடக்கும்போது தான், அந்த பாதிப்பு புரியும். இன்றைய டிஜிட்டல் உலகில் சிக்கி வதைப்படாமல் இருக்க, நாம் தான் நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும். இந்த கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் வகையில் எக்ஸ் வீடியோசை வரவேற்கலாம்.