தனுஷ் ரசிகர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விஜயசேதுபதி!

தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களாக நடித்து குறுகிய காலத்தில் பெரிய நடிகராகி விட்டவர் விஜயசேதுபதி. அதிலும் தற்போது ரஜினிகாந்துடன் அவரது 165வது படத்தில் நடிக்கிறார் விஜயசேது பதி. அதேபோல் தெலுங்கில் தயாராகி வரும் சைரா நரசிம்மரெட்டி படத்தில் சிரஞ்சீவி, அமிதாப்பச்ச னுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அந்தவகையில், ஒரே நேரத்தில் மூன்று இந்திய சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெற்றிருக்கிறார் விஜயசேதுபதி. இப்படி கிடைத்த மெகாப்பட வாய்ப்புகள் அவரையும் தற்போது மெகா நடிகராக்கியிருக்கிறது.

மேலும், தற்போது திரைக்கு வந்துள்ள ஜூங்கா படத்தை தானே தயாரித்து நடித்துள்ளார். இதற்கு முன்பு அவர் நடித்த படங்களெல்லாம் உள்நாட்டிலேயே படமாக்கப்பட்ட நிலையில், இந்த ஜூங்கா படமோ முழுக்க முழுக்க வெளிநாடுகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரானது.

அதோடு, காமெடி தாதா கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பொயட்டு தினேஷ் என்றொரு கதாபாத்திரம் உள்ளது. அதில் தனுஷை கிண்டல் செய்து விஜயசேதுபதி நடித்திருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் தனுஷ் ரசிகர்கள் இணையதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து விஜயசேதுபதி கூறுகையில், தனுஷ் என்னை விட ஒரு சீனியர் நடிகர். அவரை நான் ரொம்பவே மதிக்கிறேன். அதோடு தனது உடல்கட்டை முன்வைத்து தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகர். அப்படிப்பட்ட அவரை நான் ஏன் கிண்டல் செய்யப்போகிறேன். அது எனக்கு தேவையில்லாத விசயம் என்கிறார் விஜயசேதுபதி.