திமிரு புடிச்சவன்  

ரவுடி என்றால் கெத்து என்று நம்பிக்கொண்டிருக்கும் இளைஞர்களை, ரவுடிகள் ஒண்ணுமே இல்லை வெறும் வெத்து, போலீஸ் தான் கெத்து என உணர வைக்க ஹீரோ எடுக்கும் முயற்சி தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை

சென்னையின் ஒரு பகுதியை தன் கைக்குள் வைத்திருக்கும் ரவுடி, கொலை, கொள்ளை செய்ய 18 வயதுக்குள் இருக்கும் சிறுவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கின்றார். ஒருவேளை போலீசிடம் அவர்கள் சிக்கினால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குத்தான் செல்ல முடியும் என்ற எண்ணத்தில். இந்த ரவுடியிடம் சிக்கும் சப் இன்ஸ்பெக்டர் விஜய் ஆண்டனியின் தம்பியும் கொலைகாரனாக மாற, வேறு வழியில்லாமல் தம்பியையே சுட்டு கொள்கிறார் விஜய் ஆண்டனி. தனது தம்பியை போல் மற்ற இளைஞர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் வில்லனின் இமேஜை உடைத்து, ரவுடி உண்மையில் ஹீரோ இல்லை, போலீஸ் தான் ஹீரோ என வில்லனிடம் சிக்கியுள்ள சிறுவர்களுக்கு புரிய வைக்க விஜய் ஆண்டனி எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் மீதிக்கதை

விஜய் ஆண்டனி கடந்த சில படங்களில் கதைத்தேர்வில் இருந்த தவறுகளை இந்த படத்தில் திருத்தியுள்ளார். போலீஸ் கேரக்டருக்குரிய தோற்றம், கெத்து ஆகியவை அவருக்கு பாசிட்டிவ்வாக அமைந்துள்ளது. ரொமான்ஸ் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் நடிப்பில் தேற வேண்டியதுள்ளது.

தமிழ் சினிமா ஹீரோயின் என்றால் ஹீரோவை காதலிக்க வேண்டும், சிலசமயம் பைத்தியம் போல் உளற வேண்டும், ஹீரோவுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஃபார்முலாவில் இருந்து வேறுபட்டு நிவேதாவின் கேரக்டர் கொஞ்சம் காமெடி கலந்து உருவாக்கப்பட்டுள்ளதால் அவரது நடிப்பை ரசிக்க முடிகிறது. குறிப்பாக சப் இன்ஸ்பெக்டர் என விஜய் ஆண்டனியை நினைத்து கைகுலுக்க செல்லும்போது வாக்கிடாக்கியில் அவருக்கு இன்ஸ்பெக்டர் புரமோஷன் கிடைத்ததாக அறிவிப்பு வர, உடனே சல்யூட் அடிக்கும் காட்சியை கூறலாம்

வில்லன் கதாபாத்திரம் ரொம்ப பலவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் கூட பயமுறுத்தும் வகையில் அவரது நடிப்பு இல்லை. காமெடியன் இல்லாத குறையை வில்லன் பூர்த்தி செய்துள்ளார். ஆக்சன் பட இயக்குனர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம், ஒரு படத்தில் வில்லன் டம்மியானால் ஹீரோ அதைவிட டம்மியாகிவிடுவார் என்பதுதான்

விஜய் ஆண்டனியின் இசையில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற பாடல் ஓகே. பின்னனி இசை கதையின் ஓட்டத்திற்கு தகுந்தவாறு உள்ளது. அதேபோல் படத்தொகுப்பு ரொம்ப சுமார். ஒரு நல்ல எடிட்டரிடம் இந்த படத்தை விஜய் ஆண்டனி கொடுத்திருக்கலாம். ரிச்சர்ட் எம். நாதன் கேமிரா ஓகே ரகம்.

அறிமுக இயக்குனர் கணேஷா சொல்ல வந்த கருத்து உண்மையில் சூப்பர் கானசெப்ட். ஆனால் அதை அவர் அளித்த விதம் கொஞ்சம் சுமார் ரகம். விஜய் ஆண்டனி மீசையை எடுக்க சொன்னார் என்பதற்காக பெற்ற தந்தையை கொன்றுவிட்டு அதற்காகத்தான் மீசையை எடுத்தேன் என்று வில்லன் கூறுவது அபத்தமாக உள்ளது. ஹீரோவுக்கு திடீர் திடீரென பிபி ஏறுவதும் இறங்குவதும் லாஜிக் மிறலாக இருந்தாலும், ஒரு காட்சியில் ஹீரோவின் பிபியை குறைக்க நிவேதா கொடுக்கும் மருத்துவமுத்தம் இளசுகளுக்கான தீனி. ஒரு சண்டைக்காட்சியில் ஹீரோ அடிக்கும் அடியில் வில்லனின் அடியாட்கள் 100 அடிக்கும் மேல் பறப்பதை தவிர்த்திருக்கலாம்.

வாழ்க்கையில் ஜெயிக்கணும் என்றால் நமக்கு முன்னால் ஓடுபவனை எதிரியாக கற்பனை செய்ய  வேண்டும், ஒரு பெண்ணோட கனவில் ஒரு பையன் வந்தாலே அது காதல்தான், ‘எனக்கு என்னைவிட பெரிய ஆளை பிடிக்காது’ போன்ற வசனங்களை ரசிக்க முடிகிறது.  மொத்தத்தில் ஒரு நல்ல கான்செப்டை இயக்குனர் சொல்ல வந்த முயற்சிக்காகவும், விஜய் ஆண்டனி, நிவேதா பெத்ராஜ் நடிப்பிற்காகவும் இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்.