செம – விமர்சனம்

திருமணத்துக்கு பெண் கிடைக்காத இளைஞனுக்கு எப்படி கல்யாணம் நடக்கிறது என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் படம் ‘செம’.

நடிகர்கள் – ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா பினு, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா, காயத்திரி, ஜனா, இயக்கம் – வள்ளிகாந்த், தயாரிப்பு – இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் பி.ரவிச்சந்திரன், ஒளிப்பதிவு – விவேகானந்தன், இசை – ஜி.வி.பிரகாஷ்

திருச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் குழந்தை (ஜி.வி.பிரகாஷ்). அவரது நண்பன் ஓமகுண்டம் (யோகிபாபு). நண்பனுடன் சேர்ந்து குட்டியானையில் (வாகனம்) காய்கறி, மீன், கருவாடு என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வியாபாரம் செய்யும் சுறுசுறுப்பான இளைஞன் குழந்தை. காயத்திரியை மூன்று ஆண்டுகளாக ஒருதலையாக காதலிக்கிறார் குழந்தை. மூன்று மாதத்துக்குள் கல்யாண நடக்கவில்லை என்றால் அடுத்த ஆறு வருடத்துக்கு திருமணம் நடக்காது என குடுகுடுப்பை காரரும், ஜோசியக்காரரும் பயமுறுத்த, காயத்திரியை பெண் கேட்டு செல்கிறார் குழந்தையின் தாய் ஆரவல்லி (சுஜாதா). ஆனால் காயத்திரி இவர்களை அவமானப்படுத்த, அவர் வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயல்கிறார் ஆரவல்லி. தாயை காப்பாற்றும் குழந்தை, அவரது சொல் கேட்டு வேறு பெண் பார்க்க ஒப்புக்கொள்கிறார்.

தாய், மகன், நண்பன் என மூவரும் பெண் பார்க்கும் படலத்தை தொடங்குகிறார்கள். உள்ளூரில் யாரும் பெண் கொடுக்க மறுப்பதால், மனமுடைகிறார் குழந்தை. கடைசியாக வெளியூர் சென்று அட்டாக் பாலு (மன்சூர் அலிகான்) – அந்தி மந்தாரை (கோவை சரளா) தம்பதியின் மகள் மகிழினியை (அர்த்தனா பினு) பெண் பார்க்கிறார்கள். இருவீட்டாருக்கும் பிடித்துப்போக திருமணம் முடிவாகிறது. மகிழினிக்கும் – குழந்தைக்கும் இடையே காதல் மலர்கிறது. இதற்கிடையே மகிழினியை ஒருதலையாக காதிலிக்கும் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் மகன் ஜெமினி கனேசன் (ஜனா), இவர்களின் காதலுக்கு வில்லனாக வருகிறார். ஊரைச்சுற்றி கடன் வாங்கி தவிக்கும் மன்சூர் அலிகானின் பலவீனத்தை பயன்படுத்தி மகிழினியை திருமணம் செய்துகொடுக்க சம்மதிக்க வைக்கிறார். மனம் மாறும் மன்சூர் அலிகான் கல்யாணத்தை நிறுத்துகிறார். இதனால் அசிர்த்தி அடையும் ஜி.வி.பிரகாஷின் தாய் மீண்டும் தற்கொலைக்கு முயல்கிறார். ஜி.வி.பிரகாஷ் அர்த்தனாவை எப்படி திருமணம் செய்கிறார்?, பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறார் என்பது மீதிக்கதை.

படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை. முதல் படம் என்பதால் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் காமெடி களத்தை கையில் எடுத்து, ஆடியன்சை தியேட்டருக்கு வரவைக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த். ஒரு முழுநீள காமெடி, குடும்பக் கதைக்கு தேவையான அம்சங்களை திரைக்கதையில் புகுத்தி, பார்வையாளர்களுக்கு போர் அடிக்காத வகையில் படத்தை இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷூக்கு இது புதுஏரியா. கிராமத்து இளைஞன் குழந்தையாக கச்சிதமாக நடித்திருக்கிறார். அம்மாவின் அன்புக்கு கட்டுப்படுவது, திருமணம் முடிவானதும் தன்னை மறுத்த பெண்களை தேடிப்போய் அலப்பறை செய்வது என ஸ்கோர் செய்கிறார்.

இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கும் அர்த்தனா அவ்வளவு அழகு. திரை முழுவதையும் ஆக்கிரமித்துக்கொள்கிறார். அப்பாவி பெண்ணாக அவர் கொடுக்கும் ரியாக்சன்ஸ்…. அள்ளுறீங்க அர்த்தனா. அடுத்தடுத்தப் படங்களில் நல்லா நடிக்கவும் செய்யனும் ஓ.கே.வா.

வழக்கம் போல காமெடிக்கு நான் பொறுப்பு என இந்த படத்தையும் தாங்கிப்பிடித்திருக்கிறார் யோகி பாபு. முழுநீள காமெடி படம் என்பதால் யோகிபாபுவுக்கு ஸ்கோர் செய்ய நிறைய ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதுவும் அந்த டான்ஸ் முமன்ட் சீன் செம. ஆனால் வாய் அசைவு மட்டும் நான் சிங்கில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. கருப்பாவனர்கள் மற்றும் குண்டானவர்களை ஏளனம் செய்யாமல் இருந்திருக்கலாம்.

மன்சூர் அலிகான், கோசை சரளா, சுஜாதா என அனைவருமே தங்கள் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். இந்த படத்திலும் வில்லனை காமெடி பீசாக்கியிருக்கிறார்கள். வில்லன் ஜனா… ‘கொஞ்சம் நடிங்க பாஸ்’ சொல்ல வைக்கிறார்.

இசை ஜி.வி.பிரகாஷ் தான். நடிப்பின் மீது காட்டும் ஆர்வத்தால், இசையில் கோட்டைவிட மாட்டேன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். சண்டாளி பாடல் செம ஹிட்.

கிராமத்தின் யதார்த்த அழகையும், காதலின் எழிலையும் கவிதையாய் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேகானந்தன். ஒரு கமர்சியல் படத்துக்கு தேவையானதை அழகாகக் கொடுத்திருக்கிறார். படத்தொகுப்பும் படத்தை போரடிக்காமல் கொண்டு செல்கிறது.

ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக விரும்பி, விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஒருவனால் ஒரு நொடியில் எப்படி மனதை மாற்றிக்கொள்ள முடியும். அதேபோன்று, மகளை பற்றி தவறாக பேசுபவனின் கையை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போகும் ஒரு கோபக்கார தகப்பனும் எப்படி உடனடியாக மனதை மாற்றிக்கொள்கிறார் என்பதெல்லாம் இறைவனுக்கு தான் வெளிச்சம்.

கமர்சியல் படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக்கூடாது பாஸ்… போனோமா… படத்த பார்த்தோமா… சிரிச்சோமா… என்ற மனநிலையில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த படம் ‘செம’.