சீதக்காதி – விமர்சனம்

விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீ தரன். அவர் மீண்டும் விஜயசேதுபதியை வைத்து தற்போது இயக்கியுள்ள படம் சீதக்காதி. இந்த படம் ஒரு நாடக கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

அதாவது அய்யா ஆதிமூலம் என்ற 75 வயது நாடக நடிகர் கேரக்டரில் நடித்திருக்கிறார் விஜயசேதுபதி. சரித்திர கால நாடகங்களில் நடித்து வரும் அவர், நவீன கால மக்கள் சபாக்களுக்கு வந்து நாடகம் பார்க்காததை கண்டு வேதனைப்படுகிறார். இந்த நேரத்தில் அவரது பேரனுக்கு மூலையில் கட்டி ஏற்பட்டு அந்த மருத்துவ செலவுக்கு பெரிய தொகை தேவைப்படுகிறது. இப்படி இக்கட்டான நேரத்தில் ஒரு நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்து விடுகிறார் விஜயசேதுபதி.

இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் சீதக்காதி படத்தின் மீதிக்கதை.

75 வயது அய்யா ஆதிமூலம் வேடத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார் விஜயசேதுபதி. நடை, உடை, பாவணைகள் , பேச்சு என ஒவ்வொன்றிலும் தனிக்கவனம் செலுத்தி அந்த அய்யா ஆதிமூலம் கதாபாத்திரத்தை தத்ரூபமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். அந்த வகையில், விஜய சேதுபதியின் மெச்சூரிட்டியான நடிப்பு இந்த படத்தில் முழுமையாக வெளிப்பட்டு அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார்.

மேலும், இந்த படத்தை ஒரு ஹாரர் படம் பாணியில் கதை பண்ணியிருக்கிறார் இயக்குனர். அதாவது இறந்த பிறகும் கலைஞர்கள் அழிவதில்லை. அவர்களின் ஆன்மா வேறு கலைஞர்களின் உடம்பிற்குள் சென்று இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று சொல்லப்படுவது போல், தான் இறந்த பிறகும் வேறு நடிகர்களின் உடம்பிற்குள் சென்று நடிகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் விஜயசேதுபதி. இப்படிப்பட்ட ஒரு கதையை இயக்குனர் போரடிக்காமல் சுவராஸ்யப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் விஜயசேதுபதி தொடக்கத்தில் ஒரு 40 நிமிடஙக்ள் வருகிறார். மீதி நேரம் முழுக்க அய்யா ஆதிமூலம் என்ற பெயரை சொல்லியே கதைய நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். அதுவும் காமெடியாக ரசிக்கும்படி காட்சியமைத்திருக்கிறர்ர. அதனால் விஜயசேதுபதியை திரையில் காணமுடியவில்லையே என்கிற குறை இல்லாத அளவுக்கு படம் விறுவிறுப்பாக செல்கிறது.

அதற்கேற்ப மற்ற நடிகர்களான மெளலி, நடிகராக நடித்துள்ள சுனில், ராஜ்குமார் ஆகியோர் காமெடி கலந்து நடித்து கதைக்கு பலம் சேர்த்துள்ளார்கள்.

மொத்தத்தில் சீதக்காதி ஒரு நல்ல ஸ்கிரிப்ட். ஹீரோயிசம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தன்னோட கதையை நம்பி இந்த படத்தை எடுத்திருக்கிறார் பாலாஜிதரணீதரன். முக்கியமாக இந்த மாதிரியான கதைகளை துணிச்சலா எடுத்து நடிக்கிற தைரியும் இன்றைய தருவாயில விஜயசேதுபதிக்கு மட்டும்தான் உண்டு என்பதை அடித்து சொல்லிக்கொள்ளலாம்.