சாவித்ரியாக வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்!

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு வசனம் எழுதியவர் மதன் கார்க்கி. அதோடு அந்த படத்திற்கு பாடல்களும் எழுதினார். அந்த படம் சூப்பர் ஹிட்டனது. அதையடுத்து இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள நடிகையர் திலகம் படத்திற்கும் அவர் வசனம், பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்த படம் குறித்து மதன்கார்க்கி கூறுகையில், இந்த தலைமுறை ரசிகர்களுக்கு சாவித்ரியைப்பற்றி பெரிதாக தெரியாது. ஆனால் இந்த நடிகையர் திலகம் படம் மூலம் சாவித்ரியைப்பற்றி அவர்கள் முழுமையாக தெரிந்து கொள்வார்கள்.

அதோடு சினிமாவுக்கு வந்து பெயர், புகழ், பணம் எல்லாம் சம்பாதித்த சாவித்ரி ஒருகட்டத்தில் அனைத்தையும் இழந்து நின்றதையும் இந்த படம் ரசிகர்களுக்கு சொல்லப்போகிறது. அந்த வகையில், சாவித்ரியின் குழந்தைப்பருவம் தொடங்கி கடைசி காலம் வரை இந்த படத்தில் கதையாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், நிருபர்களாக வரும் சமந்தா, விஜய தேவரகொண்டா ஆகிய இருவரும் கதையை சொல்வது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்றபோது என்ன இது சாவித்ரிக்கு வந்த சோதனை என்று ட்ரால் பண்ணினாங்க. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஒவ்வொரு காட்சியிலும் அவரது உழைப்பு தெரிகிறது.

சாவித்ரியின் சிரிப்பு, கண்ணீர், கோபம் என ஒவ்வொரு அசைவுகளையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், இந்த தலைமுறை ரசிகர்களுக்கு சாவித்ரி என்றாலே கீர்த்தி சுரேஷ்தான் மனதில் தோன்றுவார் என்கிறார் மதன்கார்க்கி.

Tags- mathan karki, keerthi suresh.

மதன் கார்க்கி, கீர்த்தி சுரேஷ்.