சம்பத் ராமுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘திமிரு புடிச்சவன்’!

தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் சம்பத் ராம். ரஜினி, கமல், அஜித்  விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், சம்பத் ராமுக்கு தற்போது திருப்புமுனையாக  அமைந்திருக்கும் படம் ‘திமிரு புடிச்சவன்’.
 
விஜய் ஆண்டனி தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ தற்போது வெளியாகி வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், சம்பத் ராம் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கிறார். சம்பத் ராமுக்கு  போலீஸ் வேடம் புதிதல்ல என்றாலும், இதில் படம் முழுவதும் வரும் முக்கியமான வேடம் கிடைத்திருக்கிறது.
 
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் சம்பத் ராம், இப்படத்தின் சில காட்சிகள் மூலம் மக்கள்  மனதில் நிறைந்திருந்திருப்பதை போல, தொடர்ந்து இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து  திரையுலகினர் மனதிலும் நிறைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.
 
ரஜினியின் ‘கபாலி’ படத்தை தொடர்ந்து ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் நல்ல வேடத்தில் நடித்திருக்கும் சம்பத்,  ‘தட்றோம் தூக்குறோம்’ உள்ளிட்ட சில படங்களில் மெயின் வில்லனாகவும் நடித்திருக்கிறார். விரைவில்  வெளியாக உள்ள இப்படங்களுக்குப் பிறகு நிச்சயம் சம்பத் ராமுக்கு மெயின் வில்லனாக நடிக்க பல வாய்ப்புகள்  வரும் என்றாலும், அதற்கு முன்பாகவே சம்பத் ராம் வாழ்வில் வசந்தம் வீச வைத்திருக்கிறது ‘திமிரு புடிச்சவன்’.
 
படம் பார்த்தவர்கள் அனைவரும் சம்பத் ராமையும், அவரது வேடத்தையும் பாராட்ட தவறுவதில்லை. அந்த  அளவுக்கு தனது வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சம்பத் ராம், வெற்றிமாறன் தயாரிப்பில், மணிமாறன்  இயக்கத்தில் உருவாகும் ‘சங்கத் தலைவன்’ மற்றும் ‘காஞ்சனா 3’ ஆகிய படங்களிலும் முக்கியமான  கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
 
இப்படியே தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  இருக்கும் சம்பத் ராம், ஒரு காட்சியாக இருந்தாலும் தனக்கு பெயர் பெற்று தரும் காட்சியாக இருந்தால் அதிலும்  நடிக்க ரெடி, என்றே கூறுகிறார்.
 
”பிரகாஷ்ராஜ், நாசர் போன்றவர்களைப் போல வில்லனாக நடிப்பில் பெயர் எடுக்க வேண்டும் என்பது தான் தனது  நீண்ட நாள் ஆசை. பல வருடங்களாக அதற்காக நான் போராடி வருகிறேன். இன்னமும் போராட தயாராகவே  இருக்கிறேன். எனது ஆசையை நான் பல முன்னணி இயக்குநர்களிடம் கூறி வாய்ப்பும் கேட்டு வருகிறேன். அப்படி 
நான் பெற்ற வாய்ப்பு தான்  ‘திமிரு புடிச்சவன்’. என்னை புரிந்துக் கொண்டு விஜய் ஆண்டனி சாரும், இயக்குநர்  கணேஷாவும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன். படம் வெளியான  பிறகு பலர் போன் செய்து எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வாழ்ந்து ‘திமிரு புடிச்சவன்’ 
படத்தோடு நின்றுவிடாமல், பல படங்களுக்கு தொடர வேண்டும் என்பது தான் எனது ஆசை. நிச்சயம் அது நடக்கும்  என்றே நம்புகிறேன்.” என்று தனது மகிழ்ச்சியை சம்பத் ராம் தெரிவித்துக் கொண்டார்.
 
பிட்டான உடம்பு, கம்பீரமான தோற்றம், பல வருட நடிப்பு அனுபவம் என்று மெயின் வில்லனாக நடிப்பதற்கான  அனைத்து தகுதிகளையும் கொண்ட சம்பத் ராம், தமிழ் சினிமா கொண்டாடும் வில்லன் மற்றும் குணச்சித்திர  நடிகராக விரைவில் வலம் வர வாழ்த்துகள்.