ரஜினியை வீழ்த்துவாரா கமல் ?

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு தமிழக அரசியலில் புதியவர்களின் வரவு அதிகரித்துள்ளது. ஏற்கனவே விஜயகாந்த், சரத்குமார் போன்றோர் தமிழக அரசியலில் அங்கம் வகித்து வரும் நிலையில், தற்போது ரஜினி, கமல், விஷால் என பலரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இன்னும் சில நடிகர்களும் அரசியல் களம் காண தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இதுவரை ரஜினி, கமல் தங்களது கட்சி, கொடி சம்பந்தமான தகவல்களை வெளியிடவில்லை என்றபோதும், ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றத்துடன் மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் இணையதளம் ஒன்று தொடங்கி அதில் மக்களை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அந்தவகையில், ரஜினி மன்றம் என்று இணையதளம் தொடங்கியவர் இப்போது ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றியுள்ளார். ஆக, அரசியலில் வேகமாக செயல்படத் தொடங்கியிருக்கிறார் ரஜினி.

இந்தநிலையில், கமல் டுவிட்டரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், விஸ்வரூபம்,-2, சபாஷ்நாயுடு படவேலைகளை முடித்ததும் அரசியலில் அதிக நேரத்தை செலவிடுவேன் என்று கூறி வருகிறார். ஆக, ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்ததால் கமல் பின்வாங்கவில்லை.

ரஜினியுடன் மோதிப்பார்த்து விடுவோம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார். அதோடு, வெளியில் ரஜினியும் கமலும் நண்பர்களாக காட்டிக்கொண்ட போதும், திரைமறைவில் அவர்களின் மோதல் வலுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, ரஜினி கர்நாடகத்துக்காரர் என்று அவரை வெறுக்கும் ஒரு பெரும் தமிழர் படை கமலின் பின்னால் நிற்கிறார்கள். அதனால், வரப்போகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியேனும் ரஜினியை தோற்கடித்து விட வேண்டும் என்று கமலுக்கு பின்னால் நிற்பவர்கள் சபதம் எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, எம்ஜிஆர் மலையாளி தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஆனார் என்பது போன்று கர்நாடகத்துக்காரர் ரஜினி தமிழ்நாட்டில் முதல்வர் ஆனார் என்றொரு வரலாறு உருவாகக்கூடாது என்று ஒரு பெரும் தமிழர் கூட்டம் கிளம்பி கமலுக்கு பின்னால் அணிவகுத்து நிற்கிறது.

அதனால், முகராசியை வைத்து தமிழ்நாட்டு முதல்வர் நாற்காலியில் ரஜினி அத்தனை எளிதில் உட்கார்ந்து விட முடியாது என்கிற சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது.