மனுசங்கடா

நாயகன் ராஜீவ் ஆனந்தின் தந்தை இறந்ததாக அவருக்கு தகவல் வருகிறது. தந்தைக்கு இறுதி மரியாதை செய்ய கிராமத்துக்கு வருகிறார். ஊரில் இருக்கும் சாதிவெறி மக்கள் பொதுப்பாதையில் பிணத்தை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆதிக்க சாதிக்கு ஆதரவாக செயல்பட, பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் கோர்ட்டை நாடுகிறார். கோர்ட்டு உத்தரவிட்டும் பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை. 

கடைசியில், ராஜீவ்வுக்கு நியாயம் கிடைத்ததா? ராஜீவின் போராட்டம் வென்றதா? அதன் பின்னணியில் நடந்த கொடுமைகள் என்னென்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக தெரியாமல் ஒரு கதாபாத்திரமாகவே ராஜீவ் ஆனந்த் தெரிகிறார். மணிமேகலை, சசிகுமார், ஷீலா, விதூர், ஆனந்த் சம்பத் என படத்தில் நடித்துள்ள அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் அனைவரும் அந்த ஊர் மக்களாகவே தெரிவது யதார்த்தமாக இருக்கிறது.

செய்திகளில் அடிக்கடி தென்படும் ஒரு உண்மை சம்பவத்தை இயல்பு மாறாமல் படமாக்கி இருக்கிறார் அம்சன். குறைந்த செலவில் அழுத்தமான படைப்பு. சுடுகாட்டுக்கு பிணத்தை கொண்டு செல்லக்கூட தடுக்கும் சாதிவெறி என உண்மை சம்பவங்களை யதார்த்தமான படமாக்கி சர்வதேச பட விழாக்களில் கவனம் ஈர்த்தவர் அம்சன் குமார். பல விருதுகளை வென்ற அந்த படம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியாகி இருக்கிறது. அம்சன் குமாரின் முயற்சிக்கு பாராட்டுகள். 

‘உலகம் பூரா சுத்தி பெரிய பெரிய மனு‌ஷங்களோட போட்டோ எடுத்திக்கிட்டாலும் சொந்த கிராமத்துல செருப்பு காலால நடக்க முடியலேன்னு சொன்னவங்க தான் ஞாபகத்துக்கு வந்தாங்க’ போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.

கதை, வசனம் இரண்டிலும் கவனம் செலுத்திய இயக்குனர் பிற தொழில்நுட்ப வி‌ஷயங்களிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். இருந்தாலும் சாதிவெறிக்கு எதிரான அழுத்தமான பதிவு என்ற வகையில் படம் கவனத்தை ஈர்க்கிறது.

அரவிந்த் சங்கர் இசையும், பி.எஸ்.தரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘மனுசங்கடா’ உரிமை.