‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை

லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சி மூலம் தான் பல வீட்டு குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறுகிறார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் பிரைவசிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி கேட்கிறார். அந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் கள்ளத் தொடர்புகள் குறித்து பேசப்படுகிறது என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

சில நேரங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் திட்டுவதுடன் ஒருவரையொருவர் தாக்கவும் செய்கிறார்கள். நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற பங்கேற்பாளர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறார் லட்சுமி. பலரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிவியில் விவாதிக்கப்படுகிறது. நிகழ்ச்சியில் குழந்தைகள் கூட கலந்து கொள்கிறார்கள். தனி மனிதரின் வாழ்க்கையை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கல்யாண சுந்தரம் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

 

கல்யாண சுந்தரத்தின் மனுவை விசாரித்த நீதிமன்றம் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு ஜூன் 18ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.