இருட்டு அறையில் முரட்டு குத்து – விமர்சனம்

‘ஹரஹர மஹாதேவகி’ அடல்ட் படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் அடுத்த படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. படத்தின் டைட்டில் முதல் ட்ரெய்லர் வரை எல்லாமே டபுள் மீனிங் வசனங்களாலும், காட்சிகளாலும் நிரம்பிய இந்த அடல்ட் ஜானர் படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடி திருப்தியாக வந்திருக்கிறதா?

கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா ஆகிய நால்வரும் தாய்லாந்தின் பட்டாயா நகரில் இருக்கும் சொகுசு பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கிருக்கும் வித்தியாசமான நோக்கம் கொண்ட பேய் ஒன்று அவர்களிடம் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறது. அந்தப் பேயிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, அதற்காக அவர்கள் செய்தது என்ன என்பது தான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் கதை.

 

இந்தப் படம் ஹாலிவுட்டில் வெளியான ‘ஹேண்ட்ஜாப் கேபின்’ எனும் ட்ரெய்லரை தழுவி உருவான கதை. இந்தப் படத்திற்கு ஏற்றப்பட்ட அடல்ட் இமேஜ் ஹைப் காரணமாக ரசிகர்களே ரிலீஸை எதிர்பார்க்கத் தொடங்கினர். ஃபேமிலி ஆடியன்ஸ், டிவி ரைட்ஸ் ஆகியவற்றிற்கு சிக்கல் வரும் என “A” சர்ட்டிஃபிகேட் வாங்க பலரும் அஞ்சும் நிலையில், இளைஞர்களை மட்டுமே குறிவைத்து முழுக்க முழுக்க அடல்ட் படமாகவே ப்ரொஜெக்ட் செய்யப்பட்டது இந்தப் படம். தொடர்ந்து, வெளியான டைட்டில் போஸ்டர் முதல், டீசர், ட்ரெய்லர், பாடல் என எல்லாமே டபுள் மீனிங் காட்சிகளால் நிரம்பியிருந்தன.

தமிழ் சினிமாவில் அடல்ட் ஜானர் படங்கள் வெளிவருவது அபூர்வம். அந்தக் குறையை தான் போக்குவதாகக் கூறி அடுத்தடுத்து அடல்ட் ஜானர் படங்களை எடுத்து வருகிறார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அடல்ட் படத்தில் ஹாரர் ஜானரை இணைத்து அடல்ட் ஹாரராக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை உருவாக்கியிருக்கிறார். அடல்ட் படம் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டதால் எந்தக் கவலையும் இன்றி பிரித்து மேய்ந்திருக்கிறார் இயக்குநர்.

கௌதம் கார்த்திக்கும், ‘டெம்பிள்’ மங்கீஸ் ஷாராவும் படம் தொடங்கியதிலிருந்து பேசும் டபுள் மீனிங் வசனங்கள் சிரிப்புக்கு கியாரண்டி. இவர்கள் மட்டும் அல்லாது பெண்ணின் அப்பா, கௌதமின் நண்பராக வரும் செக்ஸ் டாக்டர் என எல்லோரும் டபுள் மீனிங் திரி கொளுத்திப் போடுகிறார்கள். சில ஃபார்வர்டு மெசேஜ் வகையறாக்களை தவிர்த்திருக்கலாம். பேயிடம் மாட்டிக்கொண்டு கௌதம் அன் கோ படும் அவஸ்தைகள், வயாக்ரா மாத்திரை, டேபிளை தூக்கும் காட்சி, மூக்குத்தி டயலாக், ஆபாச புகைப்படம், என இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பியிருக்கின்றன.

வித்தியாசமாக பயமுறுத்தும் பேயாக சந்திரிகா ரவி நடித்திருக்கிறார். பேயின் தேவை நிறைவேறாமல் வெளியே செல்ல முடியாத சூழலில், பெண்கள் இருவரும் பேயிடம் இருந்து தப்பிப்பதற்காக மொட்டை ராஜேந்திரனையும், பால சரவணனையும் அழைத்து வருகிறார்கள். அவர்களையும் பேய் அழைக்கழிக்க, தானாக வந்து சிக்கிக் கொள்கிறார் கருணாகரன். வேறு வழியின்றி பேய் ஓட்ட சாமியார் ஜான் விஜய்யை அழைத்து வருகிறார்கள். பேயின் டார்ச்சரில் இருந்து தப்பிக்க அவர் சொல்லும் உபாயம் என்ன, அது வொர்க்-அவுட் ஆனதா என்பதெல்லாம் கிளைமாக்ஸ்.

பாலுவின் ஒளிப்பதிவில் பகலில் தாய்லாந்தின் அழகும், இரவில் பேய் பங்களாவின் இருட்டு காட்சிகளும் உறுத்தல் இல்லாமல் ரசிக்க வைக்கின்றன. பிரசன்னாவின் எடிட்டிங் ஓகே. ஆனாலும், பேயின் நோக்கம் முதலிலேயே தெரிந்துவிடுவதால் சுவாரஸ்யம் குறைகிறது. அதை புதிய கேரக்டர்களை அறிமுகப்படுத்தி ஈடுகட்ட முயற்சித்திருக்கிறார்கள். பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே ரகம். நண்பர்களுடன் பார்த்தால் முகம் சுளிக்காமல் படத்தை ரசிக்கலாம்.

இரட்டை அர்த்த வசனங்களும் காட்சிகளும் சிறுவர்களையும், குழந்தைகளையும் எளிதில் அடையும் வகையில் இருக்கும் சூழலில் இம்மாதிரியான படங்கள் நம் சமூகத்திற்கு சங்கடங்களையே விளைவிக்கும். தியேட்டர்களுக்கு 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றாலும், இன்றைக்கு யூ-ட்யூப் உள்ளிட்ட சமூக தளங்களில் அத்தனையையும் யாரும் எளிதில் பார்த்துவிட முடியும். அந்த வகையில், தமிழ் படங்களில் இலைமறைகாயாக இருந்து வந்த இரட்டை அர்த்த வசனங்கள் படம் முழுக்கவே நிறைந்திருப்பதை எச்சரிக்கையாகவே அணுக வேண்டியிருக்கிறது. இம்மாதிரியான படங்கள் சிறுவர்களைச் சேராமல் தடுக்கவேண்டியது படக்குழுவினரின் பொறுப்பும் கூட.