”கோலி சோடா 2′

விஜய்மில்டன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வெற்றி பெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கும் இந்த ‘கோலி சோடா’ படத்தின் பிரமாதமான புரமோஷன் காரணமாக இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் இந்த சோடா ரசிகர்களின் தாகத்தை தணித்ததா? என்பதை பார்ப்போம்

முன்னாள் போலீஸ் சமுத்திரக்கனிக்கு தெரிந்த மூன்று இளைஞர்கள் வாழ்க்கையில் உழைத்து முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளவர்கள். மூவரும் மூன்று விதமான வேலைகளில் கடுமை உழைத்து கொண்டிருப்பவர்கள். மூவருக்கும் ஆளுக்கொரு காதலிகள். வாழ்க்கை மூவருக்கும் சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும்போது திடீரென மூன்று வில்லன்கள் அவர்களது வாழ்க்கையில் தனித்தனியே குறுக்கிடுகின்றனர். பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் இருக்கும் அந்த சமூக விரோதிகளால் பாதிக்கப்படும் மூன்று இளைஞர்களும் ஒரு புள்ளியில் இணைந்து பின்னர் மூவரும் சேர்ந்து அவர்களை சமுத்திரக்கனி உதவியுடன் எதிர்க்க தயாராகின்றனர். இந்த போராட்டத்தில் வெற்றி யாருக்கு? என்பதுதான் படத்தின் மீதிக்கதை

முன்னாள் போலீஸாகவும், மூன்று இளைஞர்களுக்கு உதவுபவராகவும் நடேசன் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். அவருடைய வழக்கமான நடிப்பும், ஆங்காங்கே உதிர்க்கும் தத்துவங்கள், அறிவுரைகளும் இந்த படத்திலும் உண்டு. குறிப்பாக ‘கிடைக்கிற வாய்ப்பை நீ சரியா பயன்படுத்திகிட்டா உன் வாழக்கைக்கு நீ முதலாளி ,அதை மிஸ் பண்ணிட்டே ..அடுத்தவன் வாழ்க்கைக்கு நீ கடைசி வரைக்கும் தொழிலாளி ‘ என்று கூறி சிந்திக்க வைக்கின்றார். 

கதைக்கு தேவையான மூன்று இளைஞர்களை சரியாக தேர்வு செய்ததில் இருந்தே இயக்குனர் பாதி வெற்றி பெற்றுவிட்டார். குறிப்பாக ஓட்டலில் வேலை பார்க்க்கும் பையனின் துறுதுறுப்பு அருமை. ஆட்டோ ஓட்டி முன்னேற துடிக்கும் இளைஞரும், ரெளடியாக இருந்து திருந்தும் இளைஞரும் நடிப்பில் அசத்துகின்றனர்.  அதேபோல் மூன்று ஹீரோயின்களுக்கும், மூன்று வில்லன்களுக்கும் காட்சிகள் குறைவு என்றாலும் நடிப்பு ஓகே.

இயக்குனர் விஜய்மில்டன் ‘கோலிசோடா’ முதல் பாகம் வெற்றி அடைந்ததை அடுத்து அதே பாணியில் சற்று வித்தியாசமாக இந்த படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். ஆனால் முதல் பாதியில் உள்ள யதார்த்தம் இதில் மிஸ்ஸிங். மூன்று இளைஞர்கள் முந்நூறு பேர்களை அடித்து நொறுக்குவது என்பது மிகப்பெரிய லாஜிக் மீறல். பெரிய ஸ்டார்களுக்கு கூட பொருந்தாத வகையில் அமைக்கப்பட்டுள்ள சண்டைக்காட்சி படத்திற்கு ஒரு மைனஸ். அதேபோல் முதல் பாதியில் மூன்று இளைஞர்களும் அடிவாங்கும்போதே இரண்டாம் பாதியில் திருப்பி அடிப்பார்கள் என்ற மைண்ட் செட்டுக்கு பார்வையாளர்கள் வந்துவிடுவதால் விறுவிறுப்பு குறைகின்றது. முதல் பாகம் போலவே கிளைமாக்ஸ் அமைவதற்கு ஒரு சந்தர்ப்பம் இருந்தும் ஒரெ மாதிரியான கிளைமாக்ஸ் என விமர்சனம் வந்துவிடுமோ என்று இயக்குனர் கிளைமாக்ஸை திடீரென இயல்பை மீறி மாற்றியுள்ளார்.

இருப்பினும் ஒருசில காட்சிகளிலும் வசனத்திலும் இயக்குனருக்கு கைதட்டல் கிடைக்கின்றது. குறிப்பாக ஒரு ஜோடிக்கு போலீஸ் ஸ்டேசனில் திருமணம் நடக்கும்போது  சாமி படம் தேடுபவரிடம், பெரியார், அம்பேத்கர், காந்தி படங்களை காட்டி ” இவங்களை விடவா சாமி ? என்று இன்ஸ்பெக்டர் கூறும் காட்சிக்கு அரங்கத்தில் கைதட்டல் கிடைக்கின்றது. மேலும் கவுதம் மேனனை முதல் ஐந்து நிமிடங்களிலும் கடைசி ஐந்து நிமிடங்களிலும் சரியாக பயன்படுத்தியிருப்பது சிறப்பு. கவுதம் மேனன் இனிமேல் நல்ல நடிகராகவும் கோலிவுட்டில் வலம் வரலாம்.

அச்சு ராஜாமணியின் பாடல்கள் அனைத்தும் கேட்கும் வகையில் இருப்பதோடு, கதையோடு ஒன்றிணைந்திருப்பது கூடுதல் ஆறுதல். பின்னணி இசையும் அருமை. விஜய்மில்டனின் கேமிரா வழக்கம் போல் ஒரு விருந்து. அதேபோல் தீபக் படத்தொகுப்பும் சிறப்பு. மொத்தத்தில் முதல் பாகம் அளவுக்கு யதார்த்தம் மிஸ்ஸிங் என்றாலும் சொல்ல வந்த கருத்து, சமுத்திரக்கனியின் நடிப்பு மற்றும் ஆக்சன் காட்சிகளுக்காக ஒருமுறை பார்க்கலாம்.