நடிகர்களின் வியாபாரத்திற்கு ஏற்ற சம்பளம்தான் கொடுக்கணும்.- ஞானவேல்ராஜா பேச்சு

சூர்யாவின் உறவினரும், சூர்யா, கார்த்தியின் ஆஸ்தான தயாரிப்பாளருமான தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, நேற்று நடைபெற்ற ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படத்தின் தமிழ் டப்பிங்கின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார்.

விஷால் அணியின் சார்பாக வெற்றிபெற்று தயாரிப்பாளர் சங்கச் செயலாளராக இருந்த ஞானவேல்ராஜா, விநியோகஸ்தர் தரப்பிலும் தங்களது அதிகாரத்தை நிறுவுவதற்காக செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில், தமிழ் சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளத்தால் தான் தெலுங்கு சினிமா பக்கம் போகும் முடிவில் இருப்பதாக வருத்தத்தோடு தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா. “தெலுங்கு சினிமா உலகத்தைப் பார்த்து நாம கத்துக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.

நடிகர்களின் சம்பளம் தான் இங்கே பெரிய பிரச்னையா இருக்கு. அதில் நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். உதாரணத்துக்கு, தமிழில் ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்குனா 50 கோடி ரூபாய் சம்பளம் கேக்குறாங்க. ஆனா, தெலுங்கில் 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தா போதும்.

தெலுங்கு சினிமாவில் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கு. தமிழ் சினிமாவில் சிலரோட சுயநலம் எல்லாத்துக்கும் தடையா இருக்கு. நடிகர்களின் வியாபாரத்திற்கு ஏற்ற சம்பளம் தான் கொடுக்கணும். இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் தமிழ் சினிமாவில் வரணும்.

நான் ஏற்கெனவே தெலுங்குப் பக்கம் ஆபிஸ் போட்டுட்டேன். தமிழ் சினிமாவுக்கு டாட்டா சொல்லிட்டு டோலிவுட் பக்கம் போற ஐடியாவில் இருக்கேன். தமிழ்ல படம் எடுத்து நஷ்டமாகுறத விட லாபம் வர்ற இடத்துக்கு போயிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்” எனப் பேசினார்.