என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா  (விமர்சனம் )

ஒரு மனிதன் எந்த சூழலிலும் தனது கேரக்டரை மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதை தேசபக்தி, ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் கலந்து சொல்லியிருக்கிறது ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ திரைப்படம். தயாரிப்பு – ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி, இயக்கம் – வி.வம்சி, ஹீரோ – அல்லு அர்ஜூன், ஹீரோயின் – அனு இமானுவேல், மற்ற நடிகர்கள் – அர்ஜூன்,சரத்குமார், நதியா, சாய்குமார், சாருஹாசன், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர்.
இந்திய எல்லையில், பனிமலையில் காவல் காக்க வேண்டும் என்பது கோபக்கார ராணுவ வீரன் சூர்யாவின் (அல்லு அர்ஜூன்) கனவு, லட்சியம் எல்லாமே. ஆனால் அவரது முரட்டுத்தனமான கோபமே அல்லுவின் கனவுக்கு வினையாக மாறிவிடுகிறது. பப்பில் தகராறு செய்யும் அமைச்சர் மகனை அடித்து உதைப்பது, அதை விசாரிக்க வந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் கையை உடைத்து ஸ்டேஷனையே அடித்து நெறுக்குவது என அதகலம் செய்யும் அல்லு அர்ஜூன், மிலிட்டரி கேம்பசில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தீவிரவாதியை, உயர் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் சுட்டுக்கொல்கிறார். அடுத்தடுத்த சம்பவங்களால் ஆத்திரம் அடையும் கர்னல் (பொமன் இரானி), அல்லுவை ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்கிறார். அல்லுவின் வளர்ப்பு அப்பாவான ராவ் ரமேஷ் கெஞ்சிக்கூத்தாடி கர்னலை சமானாப்படுத்துகிறார். அல்லுவை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றால், விஜயவாடாவில் இருக்கும் இந்தியாவின் தலைசிறந்த உளவியல் நிபுணர் பேராசிரியர் ராமகிருஷ்ண ராஜிடம் (அர்ஜூன்) நற்சான்றிதழ் பெற்று கையெழுத்து வாங்கி வர வேண்டும் என கன்டிஷன் போடுகிறார் கர்னல். தனது தந்தையான ராமகிருஷ்ண ராஜிடம் 10 வருடங்களுக்கு முன் சண்டைபோட்டு வீட்டைவிட்டு வெளியேறும் அல்லு, அவரின் கையெழுத்தை பெறுவதற்காக மீண்டும் விஜயவாடா கிளம்புகிறார். விஜயவாடாவில் பெரிய தாதாவாக ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கல்லாவின் (சரத்குமார்) மகனுடன் மோதல் ஏற்படுகிறது. 21 நாட்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே கையெழுத்துபோட முடியும் என தந்தை அர்ஜூன் கறாராக சொல்லிவிட, சவாலை ஏற்று தனக்கு எதிரானப் போராட்டத்தை தொடங்குகிறார் அல்லு அர்ஜூன். கோபத்தை கட்டுப்படுத்தி அல்லு சவாலில் வென்றாரா? மீண்டும் ராணுவப் பணியில் சேர்ந்தாரா என்பது க்ளைமாக்ஸ். வழக்கமான மாஸ் ஹீரோ கதைதான். ஆனால் அதை திறம்பட செய்திருக்கிறார் இயக்குனர் வி.வம்சி. எது உண்மையான தேசபக்தி என்பதையும், ஒருவன் தனது இயல்பை மாற்றிக்கொண்டால் அவன் என்ன ஆவான் என்பதையும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் சூப்பராக சொல்லி இருக்கிறார். அல்லுவிடம் உள்ள திறமைகளை மொத்தமாக அள்ளியிருக்கிறார். மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டாக இருந்தாலும், அல்லுவை அன்டர்ப்ளே செய்ய வைத்திருப்பது அசத்தல். அதுவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மற்றும் தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் இந்த வேளையில் மிகவும் அவசியமான கருத்தை முன்வைத்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்டலாம். முழு படமும் அல்லு அர்ஜூனை சுற்றியே நடக்கிறது. அதை மிகச்சரியாக உணர்ந்து, படம் முழவதையும் தனது தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் ஸ்டைலிஷ் ஸ்டார் அ.அ. ஒரு ராணுவ வீரனை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார். பிட்டான உடல், கூர்மையான பார்வை, வெள்ளந்தியான சிரிப்பு, முரட்டு முட்டாள்தனமான கோபம், அதற்கேற்ற உடல்மொழி, மிலிட்டரி கட்டிங் ஹேர் ஸ்டைல், இடது புருவத்தில் தழும்பு என அனைத்து விஷயங்களையும் மிகுந்த கவனமுடன் செய்திருக்கிறார். எதிரிகளை ஒரே அடியில் சாய்ப்பது, அவர்கள் பதுங்கிப் போகும் அளவுக்கு பயத்தை உண்டாக்குவது என ஆக்ஷன் காட்சிகளில் பின்னிபெடலெடுக்கும் அல்லு, அனு இமானுவேலுடனான ரொமான்ஸ் காட்சிகளில் அப்படியே ஒரு காதல் நாயகனாக மாறியிருக்கிறார். லவ்வரிடம் சண்டையிடுவது, அதற்காக வருந்துவது, அம்மாவை (நதியா) பார்க்கும் போது சென்டிமென்ட் காட்டுவது, தனது கேரக்டரை மாற்றிக்கொள்ளப் போராடுவது என நடிப்பில் பலபரிமாணங்களை காட்டி அசத்தியிருக்கிறார் அல்லு. ஒரு பாடல் காட்சியில் தொப்பியை காலில் இருந்து தலையில் தூக்கிப்போடுவதற்காக ஆறு மாதம் பயிற்சி செய்திருக்கிறார் அல்லு. அந்த உழைப்பு வீண்போகவில்லை. படத்தில் அப்படியே தெரிகிறது. ஆனால் ஸ்டைலுக்காக சதா சுருட்டு பிடித்துக்கொண்டிருப்பது, மதுக்குடித்தால் ஸ்ட்ரெஸ் குறையும் என நடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். உங்கள் ரசிகர்களுக்கு நீங்கள் நல்ல விஷயங்களை சொன்ன மாதிரி இருந்திருக்குமே. அல்லுவின் ஆக்ஷ்னிலும், மியூசிக்கிலும் மயங்கி அவரை உருகி, உருகி காதலிக்கும் வழக்கமான கேரக்டர் அனு இமானுவேலுக்கு. ஆனால் அதை மிகக்கச்சிதமாக செய்திருக்கிறார் அவர். அல்லுவை முத்தமிட்டு மயங்குவது, ராணுவ வீரர் எனத் தெரிந்ததும் விலகிப்போவது, பின்னர் விசாகப்பட்டினத்தில் பார்த்தும் இயல்பாக வந்து பேசுவது என அசல் லவ்வர் கேர்ள் கேரக்டரில் அசத்தியிருக்கிறார் அனு இமானுவேல். அல்லு அர்ஜூன் தந்தையாக ஆக்ஷன் கிங் அர்ஜூன். ஆக்ஷன் காட்சிகளை எல்லாம் அல்லுவே பார்த்துக் கொள்வதால், ஸ்டிரிட்டான அதே நேரத்தில் அன்பான தந்தையாக நடித்து பாராட்டுக்களை பெறுகிறார். வழக்கமான அம்மா வேடத்தில் நதியா. லோக்கல் தாதாவாக சரத்குமார். அல்லுவின் மாஸ் ஆக்ஷனுக்கு ஏற்ற மாஸ் வில்லன். அறிமுகக் காட்சி தொடங்கி இறுதி காட்சி வரை தனக்கான பாத்திரத்தை எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறார். காமெடிக்காக வரும் வெண்ணிலா கிஷோர் தனது பணியை செம்மையாக செய்திருக்கிறார். டப்பிங் படமாக இருந்தாலும்கூட சிரிப்பு வருகிறது. முன்னாள் ராணுவ வீராராக நடித்திருக்கும் சாய்குமார், அவரது மகனாக அன்வர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் லகடபாடி, சுதந்திரப் போராட்ட தியாகி சாருஹாசன் உள்ளிட்டவர்களும் அவரவர் பணியை சரியாக செய்திருக்கிறார்கள். பொதுவாக தெலுங்கு டப்பிங் படங்களில் தெலுங்கு வாடையே வீசும். ஆனால் இந்தப்படம் நேரடி தமிழ்ப் படம் பார்ப்பது போன்ற உணர்வையே கொடுக்கிறது. காரணம் விஜய் பாலாஜியின் தமிழ் வசனங்கள். ஒருவன் எப்போதும் தனது கேரக்டரை மாத்திக்கூடாது, நீ என்னவாக வேண்டும் என்பதை உன்னுடைய சாய்ஸ் தான் முடியும் செய்ய வேண்டும்… உன்னுடைய சூழல் முடிவு செய்யக்கூடாது என்பது போன்ற பல வசனங்கள் அருமை. விஷால் – சேகரின் இசையில் ஒலிக்கும் பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது. அதுவும் லவ்வர் ஆர் பைட்டர் பாடலும் அதற்கு அல்லு ஆடியிருக்கும் நடனமும் பிரமாதம். கோச்சா, ரவிவர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷமன் என நான்கு பேர் சண்டை பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். அல்லுவை நன்றாகவே டிரில் வாங்கி இருக்கிறார்கள். முறுக்கேற்றிய உடம்புடன் அல்லு போடும் சண்டைகள் சூப்பர் ஆக்ஷன் பிளாக். ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் என அனைவருமே ஒரு மாஸ் ஹீரோ ஆக்ஷன் என்டர்டெயினர் படத்துக்கு தேவையான அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார்கள். 21 நாட்கள் சவால் முடிந்த உடனேயே க்ளைமாக்ஸ் வந்துவிடும் என எதிர்ப்பார்த்தால் அதன்பிறகு சுமார் அரைமணி நேரம் ஜவ்வென இழுத்திக்கிறார்கள். அதைமட்டும் இன்னும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா தான் நம் வீடு என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கும் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.. பெயர் சொல்லும் பிள்ளை…