விஜய்யோடு மீண்டும் இணைகிறார் காஜல் அகர்வால்?

vijaiவிஜய்யும் காஜல் அகர்வாலும் இணைந்து ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றியடைந்தன. இதனால், ராசியான ஜோடியாகிவிட்ட விஜய்-காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இணையப்போவதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அதாவது, விஜய் தற்போது தனது 59-வது படமாக அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் தனது 60-வது படமாக பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டனர். இந்நிலையில், இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீப நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே, வரும் பொங்கலுக்கு இந்த படத்தின் நடிகை குறித்தும் மேலும் பிற நடிகர், நடிகையர் குறித்தும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, பொங்கலுக்கு விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நேரத்தில், டீசர் வெளியிடுவது தாமதமாகும் என படக்குழுவினர் அறிவித்தது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதேநேரத்தில், பொங்கலுக்கு விஜய்யின் 60-வது படம் குறித்த தகவல்கள் வெளிவருவது ரசிகர்களை சற்று ஆறுதலடைய வைத்திருக்கிறது.