மும்பையில் பணமோசடி: தமிழ் சினிமா இயக்குனர் உள்பட 3 பேர் கைது!

0a7497c2-5d61-471a-a431-58dc896f8965_S_secvpfதமிழில் வெளியான ‘உண்மை’ திரைப்படத்தை இயக்கி நடித்தவர் பி.ரவிக்குமார். பட தயாரிப்பாளரும் ஆவார். சென்னையை சேர்ந்த பி.ரவிக்குமார் கடந்த ஆண்டு மும்பை தாராவிக்கு வந்திருந்தார். அவர் தயாரிக்கும் ஒரு படத்திற்கு அதிக நிதி தேவைப்பட்டுள்ளது.

அப்போது தாராவியை சேர்ந்த பாலாஜி பொன்ராஜ் (வயது 29) என்பவரிடம் கடன் கேட்டார். அவர் ரூ.6 லட்சத்தை எடுத்துக்கொண்டு தாராவியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த வி.ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வி.என்.நடராஜன், அன்பழகன் ஆகியோரை சந்தித்து கொடுத்தார். பணத்தை வாங்கியதும் அவர்கள் குறிப்பிட்ட மாதத்தில் அந்த பணத்தை இரட்டிப்பு தொகையுடன் தருவதாக உத்தரவாதம் அளித்தனர்.

ஆனால், ஒரு வருடமாகியும் பி.ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. 3 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. இதனால் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த பாலாஜி பொன்ராஜ் இது குறித்து தாராவி போலீஸ் நிலையத்தில் பி.ரவிக்குமார் உள்பட 3 பேர் மீதும் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 9-ந்தேதி மும்பை கிராண்ட்ரோடு சிகப்பு விளக்கு பகுதியில் பி.ரவிக்குமார் உள்பட 3 பேரும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் பாந்திராவில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 3 பேரையும் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவர்களை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். இது குறித்து தாராவி சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜே.டி.மோரே கூறியதாவது:-

பாலாஜி பொன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் இயக்குனர் பி.ரவிக்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்துள்ளோம். இவர்கள் மேலும் பலரிடம் பணமோசடி செய்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இதில், சென்னையை சேர்ந்த பிரபல தமிழ் நடிகை ஒருவரிடமும் பி.ரவிக்குமார் மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளோம். கைதான 3 பேரிடமும் விசாரணை நடத்த சென்னை போலீசார் விரைவில் மும்பை வர உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.