டுவிட்டரில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

2ljm42q.jpgஇன்றைய நவநாகரீக உலகம பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்துள்ளனர். அதிலும் அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனில் இருந்து நம்மூர் வடிவேலு வரை டுவிட்டரில் இருக்கின்றனர். அந்தவகையில் தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தும் முதன்முறையாக டுவிட்டரில் இன்று(மே 5ம் தேதி) முதல் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ரஜினி அளித்துள்ள பேட்டியில், என் ரசிகர்கள் ஏராளமானோர் நான் சமூக வலைத் தளத்தில் இருக்க வேண்டும் என விரும்பினர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளேன். இனி தன் சம்பந்தப்பட்ட படங்கள், மற்ற விஷயங்கள் உள்ளிட்ட அனைத்தையும் டுவிட்டர் மூலமாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ரஜினி டுவிட்டருக்கு வந்த சில நிமிடங்களிலேயே 10 ஆயிரம் பேர் அவரை பாலோ பண்ண தொடங்கியுள்ளனர். ரஜினி டுவிட்டருக்கு வந்ததை, டுவிட்டர் இந்தியாவின் தலைமை அதிகாரி ரிஷி ஜெட்லி வரவேற்றுள்ளார். இதேப்போல் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், துரை தயாநிதி அழகிரி உள்ளிட்ட திரைபிரபலங்களும் ரஜினி டுவிட்டருக்கு வந்ததை வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிலும் நடிகை ஹன்சிகா, ரஜினி சார் டுவிட்டருக்கு வந்ததால், டுவிட்டர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ரஜினியின் அதிகாரப்பூர்வ் டுவிட்டர் பக்கம் இதுதான்… @superstarrajini