ஓ மை கடவுளே –  விமர்சனம்

பள்ளிப்பருவத்திலிருந்து ஒன்றாக விருக்கும் நண்பர்கள் அர்ஜூன் (அசோக் செல்வன்) அனு (ரித்திகா சிங்) மணி (சாரா). ஆண் பெண் பேதமின்றிப் பழகும் அவர்கள் சேர்ந்து மதுக்குடிக்கும் அளவு நெருக்கம்.

ஒருநாள் ரித்திகாசிங், என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று அசோக் செல்வனிடம் கேட்கிறார்.
அதை ஒப்புக்கொண்டபோது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை மட்டும் சொல்லி நிறுத்திவிடாமல் ஒப்புக்கொள்ளாவிட்டால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்பதையும் சேர்த்துச் சுவாரசியமாகச் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.

நண்பன், காதலன், கணவன் என பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார் அசோக்செல்வன். ரித்திகாசிங்கிடம் நெருங்கமுடியாமல் தவிக்கும் போதும் வாணிபோஜனை நெருங்கத் தவிக்கும்போதும் நடிப்பில் வேறுபாடு காட்டுகிறார். பல இடங்களில் எதுவும் பேசாமலே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்.

ரித்திகாசிங்குக்குப் பொறுப்பான வேடம். அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.எவ்வளவுதான் நாகரிகமாக வளர்ந்தாலும் மனைவி என்றாகிவிட்டால் மாற்றம் வஎதுவிடும் என்பதை நடிப்பில் காட்டுகிறார்.

வாணிபோஜன் கொஞ்சம் முதிர்ச்சியாகத் தெரிகிறார். அதற்கேற்ப அவரை மீரா அக்கா என்று சொல்லிவிடுகிறார்கள்.அதனால் எல்லாம் சரியாகிறது.

விஜய்சேதுபதி,ரமேஷ்திலக் ஆகியோரின் வேடம் நன்று. அவர்களை வைத்துக் கொண்டு, சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

சாரா,எம்.எஸ்.பாஸ்கர், கஜராஜ்,சந்தோஷ் ஆகியோர் கொடுத்த வேடங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு கதைக்கேற்ப இருக்கிறது.

லியோன் ஜேம்ஸின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. கதைப்போமா பாடல் வருடிச்செல்கிறது.

வாணிபோஜனுக்காக அசோக்செல்வனும் ரித்திகாசிங்கும் போகும் பயணம் படத்தின் பெரும்பலம்.வாணிபோஜன் மீதான ஈர்ப்பில் தன் காதலையும் பலத்தையும் அசோக்செல்வன் உணரும் காட்சிகள் அழகு.

அளவுக்கதிகமான வசனங்கள், திரைக்கதையில் இருக்கும் லாஜிக் ஓட்டைகள் ஆகியனவற்றை காதல் மேஜிக்கில் மறக்க வைக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து.