சீறு – விமர்சனம்

மகாகவி பாரதியார் சீறுவோர்ச் சீறு என்றார். அதாவது பெரும் கோபம் கொண்டு உயிர்களைத் துன்புறுத்துவோரைப் பார்த்து சும்மா இராதே சீறி எழு என்றார்.அதைத்தான் முழுநீளப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னசிவா.

மயிலாடுதுறையில் உள்ளூர் தொலைக்காட்சி நடத்தி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளோடு மக்களுக்கு நன்மை பயக்கும் செய்திகளையும் வெளியிட்டு வருகிறார் மணிமாறன்( ஜீவா.) அதனால் அவருக்கு உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரோடு பகை.

அதன்விளைவாக சென்னையில் இருக்கும் பிரபலரவுடியான மல்லியோடு (வருண்) மோதல் ஏற்படுகிறது. அதனால் சென்னை வருகிற ஜீவாவுக்கு என்ன நேருகிறது? என்பதைச் சொல்வதுதான் சீறு.

பக்கத்து ஊருதான் பத்து நிமிசத்துல வந்துடுறேன் என்று சொல்லிப் பறந்துவந்து அறிமுகம் ஆகிற ஜீவா, அப்போதிருந்து எதிரிகளிடம் அதிரடி தங்கையிடம் பாசம் நண்பர்களிடம் அன்பு ஆகிய எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்.

ரொம்பப் பழசா இருக்கு பயமே வரல, மச்சி ஒரு டீ சொல்லேன் என்று உற்சாகமாய் நடித்திருக்கிறார் ஜீவா.

வாசுகியாக வருகிற நாயகி ரியாசுமன் புதுவரவு. அழகாக இருக்கிறார். வா சுகி என்கிற அழகான பாடல் அவரால் அமைந்திருக்கிறது. மற்றபடி அவருக்குப் பெரிதாக வேலையில்லை.

ஜீவாவின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி நன்றாக நடித்துக் கலங்க வைத்திருக்கிறார். பிரசவ வேதனையில் துடிக்கும் காட்சி பதற வைக்கிறது.

சாதனை மாணவியாக நடித்திருக்கும் சாந்தினி சிறப்பு. எதிர்காலம் குறித்து அவர் விவரிக்கும் காட்சி சிறப்பு.

மல்லி என்கிற வேடத்தில் நடித்திருக்கும் வருண், அந்த வேடத்துக்கு உரிய நியாயத்துடன் நடந்திருக்கிறார். சட்டென அவரை முடக்கிப்போட்டுவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் அதிரடிகாட்ட விட்டிருக்கலாம்.

வில்லனாக நடித்திருக்கும் நவ்தீப் மிரட்டுகிறார். அவர் வழக்குரைஞரா? இல்லைகுத்துச்சண்டை வீரரா? என்று சந்தேகப்படுமளவுக்கு உடலை வைத்திருக்கிறார்.

நகைச்சுவைக்கு சதீஷ். வருகிற காட்சிகளில் தன் இருப்பைப் பதிய வைத்துக்கொள்கிறார்.

இமானின் இசையில் வாசுகி, செவ்வந்தியே ஆகிய பாடல்கள் நன்று. அவற்றை நன்றாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு மயிலாடுதுறை மற்றும் சென்னை ஆகியனவற்றை நன்றாக வேறுபடுத்திக் காட்டியிருக்கின்றன.

சண்டைப்பயிற்சியாளர் கனேஷ்குமார் படத்துக்குப் பெரும்பலம். ஒவ்வொரு சண்டையும் கவனிக்க வைக்கிறது. ஜீவாவுக்கு இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் நற்பெயரைப் பெற்றுத்தரும்.

ஒரு சின்னக் கதையை வைத்துக் கொண்டு முழுநீளப் பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ரத்னசிவா.
வழக்கமான கதையாக இருந்துவிடுவதிலிருந்து, ஜீவாவுக்கும் வருணுக்குமான உறவு, சாதனை மாணவியின் கதை ஆகியனவற்றை வைத்து திரைக்கதையை வேறுபடுத்தியிருக்கிறார்.

ஜீவாவுக்கு ஒரு நல்ல ஆக்‌ஷன் படமாக அமைந்திருக்கிறது.