களவாணி- 2  விமர்சனம்

கதை – இது களவாணி படத்தின் தொடர்ச்சி இல்லை. ஆனால் அதில் வரும் அத்தனை பாத்திரங்களும் அப்படியே அதே உறவுமுறைகளில் வருகிறார்கள். வேலைக்கு போகாமல் வெட்டியாய் ஊருக்குள், களவாணித் தனம் செய்து திரியும் விமல், ஊருக்குள் வரும் கவுன்சிலர் எலக்‌ஷனில் விளையாட்டுப் போக்கில் நிற்கிறார். அது பிரச்சனையாக ஒரு நிலையில் தன் காதலுக்குக்காக அந்த எலக்‌ஷனில் எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் கதை. 

விமர்சனம்: ஊர் பிரசிடெண்ட் எலக்‌ஷன் தான் கதைக்களம், பல குளறுபடிகளும் காமெடிகளும் நடக்கும் தேர்தல். வெற்றி பெற்ற களவானி அறிக்கி தான் இதில் ஹீரோ தேர்தலில் அறிக்கி எப்படி ஜெயிக்கிறர் என்பது தான் பின்னனி. இப்படி அருமையாக கிடைத்த, அடித்து ஆடவேண்டிய களத்தில் நின்று மூச்சுவாங்கி திணறியிருக்கிறார்கள். 

திரைக்கதையில் பாக்கியராஜை ஞாபகப்படுத்தி ஒரு புதிய, இன்றைய நவீன கிராமத்தை, நம் கண் முன்காட்டிய படம் தான் களவாணி. கிராமத்து களவாணி இளைஞர்களின் சேட்டையை, பலவிதமான கிராமத்து மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்திய படம் ஆனால் களவாணி இரண்டாம் பாகத்தில் எல்லாமே மிஸ்ஸிங். கிராமத்து மனிதர்களில் சிலர் ஒரு சில காட்சிகளில் மட்டும் ஈர்க்கிறார்கள். பல இடங்களில் லாஜிக் சொதப்பல் 

விமல் – ஓவியா இருவரிடமும் ஒரு முதிர்ச்சி அப்பட்டமாக தெரிகிறது. கள்வாணியில் மேக்கப் இல்லா அப்பாவி முகங்களாக இருந்தார்கள் இதில் மேக்கப் பிதுங்கி தெரிவது ஏனோ?. விமலுக்கு இந்த ரோல் அல்வா, ஆனால் இதில் களவாணியில் இருந்து நிறைய மாற்றங்கள் இருக்கிறது. அந்தக் கேரக்டர் கடடைசி வரை எதுவும் பெரிதாக திட்டமிடாமல் தேமேவென இருக்கிறது. திரைக்கதையே ஒரு வகையில் அப்படித்தான் இருக்கிறது. இளவரசு சரண்யா இந்த படத்தின் ஒரே அழகு இவர்கள் தான். இருவரிடத்திலும் அத்தனை அந்நியோன்யம் அத்தனை பாந்தம். ஓவியா அழகாக இருக்கிறார் அவ்வளவே! 

ஆர் ஜே விக்னேஷிடம் சினிமாவுக்கான நடிப்பு வரவில்லை என யாராவது தெளிவு செய்தால் பராவாயில்லை. காட்சிகளுக்கான முகபாவனைகளை மாற்றி மாற்றி கொடுத்துக்கொண்டிருக்கிறார். கஞ்சா கருப்பு பல காலங்களுக்கு பிறகு சிரிக்க வைக்கிறார். 

இயக்குநர் சற்குணம் வாகை சூடவா படத்தை செய்தவர் தானா என பலத்த சந்தேகம் வருகிறது. சினிமாவுக்கான எந்த அழகியலும் படத்தில் இல்லை. கிராமத்து எலக்‌ஷனை கொஞ்சம் ஆராய்ந்திருந்தால் பல கதைகள் கிடைத்திருக்கும் ஆனால் திரைக்கதை சுவாரஸ்யமே இன்றி வெகு மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. உருவாக்கத்தில் இத்தனை கவனக் குறைவா எனக் கேடுக்கும்படி இருக்கிறது. ஒளிப்பதிவு காட்சிகளில் ஒன்று கூட சரியான ஃபிரேமிங் இல்லை சிறு பிள்ளைகளின் குறும்படம் போல் எடுக்கபட்டு இருக்கிறது. எடிட்டிங் மொத்தமான சொதப்பல். பல இடங்களில் காட்சிகள் முடிவே இல்லாமல் கட்டாகிறது. பல ng ஷாட்கள் வைத்து எடிட் செய்தது போல் இருக்கிறது. இசை மற்றுமொரு சொதப்பல் கலக்கப் போவது யாருக்கு நகைச்சுவை மேம்படுத்தி காட்ட அங்கங்கே வரும் இசை போல் படத்தில் காமெடி வருகிறது என இசை சொல்லிக் கொண்டிருக்கிறது. மொத்தத்தில் ஒரு நல்ல டீமிலிருந்து ஏமாற்றம் தரும் படம். 

பலம் – கிராம பின் புலம், அப்பாவி மனிதரகளின் பின்னனி. 

பலவீனம் – திரைக்கதை, இசை , ஒளிப்பதிவு , எடிட்டிங் 

ஃபைனல் பஞ்ச் : நிறைய பொறுமை இருந்தால் கொஞ்சம் சிரிப்பைத் தருகிறான் இந்தக் களவாணி.