ஹவுஸ் ஓனர் – ( விமர்சனம் )

2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில் மூழ்கிய போது நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் லட்சுமி. மழை பெய்யும்போது படம் தொடங்குகிறது. கிஷோரும் ஸ்ரீரஞ்சனியும் தனியாக வசிக்கும் வயதானவர்கள். கிஷோருக்கு அல்சைமர் என்னும் ஞாபக மறதி நோய். இந்நோய் தீவிரமாகி மனைவியையே யார் என்று கேட்கும் பரிதாப நிலையில் இருக்கிறார். ஸ்ரீ ரஞ்சனி தான் அவரை பார்த்துக்கொள்கிறார்.

கிஷோர் சிறுவயதாக இருக்கும்போது லவ்லினை திருமணம் செய்துகொண்டது நினைவுகளாக வந்து போகிறது. பாலக்காட்டு பிராமண வீடுகளில் நடப்பது போல திருமணம் நடக்கிறது. திருமணத்தின்போது இளவயதுக்கே உரிய குறுகுறுப்பு, காதல் என படம் விரிகிறது. இன்னொரு பக்கம் கிஷோர், ஸ்ரீரஞ்சனி வீட்டை வெள்ளம் சூழ்கிறது. வீடு முழுக்க வெள்ளம் வர இருவரும் சிக்கி தவிக்கிறார்கள். முடிவு என்ன ஆகிறது என்பதே படம்.

பெரிய கதாநாயகனோ, கதாநாயகியோ தேவைப்படாத ஒரு அழகான எமோ‌ஷனல் கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லி ரசிகர்களை கட்டிப்போட்டதோடு கண்கலங்க வைத்து அனுப்புகிறார் லட்சுமி.

கிஷோர், ஸ்ரீ ரஞ்சனி இருவரும் தங்களது பக்குவமான நடிப்பால் படத்தை தாங்குகிறார். அல்சைமர் நோயாளியாக எல்லாவற்றையும் மறந்துவிடும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் கிஷோர். அவரை குழந்தை போல பார்த்துக்கொள்ளும் மனைவியாக ஸ்ரீ ரஞ்சனியின் நடிப்பும் அசத்தல். இருவரும் நமது அடுத்த வீட்டு பெரியவர்கள் போல இயல்பாக வாழ்ந்து இருக்கிறார்கள். இளம் ஜோடிகளாக வரும் பசங்க கிஷோர், லவ்லின் இருவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற தேர்வுகள்.

ஜிப்ரானின் இசை படத்தின் கதையோடு ஒட்டி உறவாடுகிறது. பின்னணியில் நமக்குள் பதற்றத்தை கடத்தி இருக்கிறது. கிருஷ்ணசேகரின் ஒளிப்பதிவு பாலக்காட்டு பிராமண வீடுகளையும் சென்னையில் வெள்ளத்தால் சூழப்படும் வீடுகளையும் கண்முன்னே கொண்டு வருகிறது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். பிரேமின் படத்தொகுப்பும் கச்சிதம்.

லட்சுமி எளிய கதையை அருமையான படமாக்கி இருக்கிறார். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க நம்மை பதற வைக்கிறார். படம் முழுக்க அன்பு தான். இந்த காரணங்களுக்காகவே சின்ன நெருடலாக இருக்கும் பாலக்காட்டு பிராமண மொழியை மன்னிக்கலாம்.

ஒரு உண்மைக்கதையை கையில் எடுத்து அதில் ஏராளமான அன்பையும் கணவன் மனைவி அன்யோன்யத்தையும் அழகாக சொல்லி இறுதிக்காட்சியில் கலங்க வைத்த விதத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தான் ஒரு கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர் என்பதை அழுத்தமாக பதித்து இருக்கிறார்.

மொத்தத்தில் ‘ஹவுஸ் ஓனர்’ சிறந்த வீடு.