20 நாட்களில் முடிந்த படப்பிடிப்பு! – இயக்குநராக அசத்தும் ‘சிட்டிசன்’ மணி 

அஜித்தின் ‘சிட்டிசன்’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் ‘சிட்டிசன்’ மணி, இதுவரை சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு, அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருபவர், வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கியவர், தற்போது இயக்குநராக கலக்க ஆரம்பித்துவிட்டார்.

நடிகர்கள் பலர் இயக்குநர் அவதாரம் எடுத்தாலும், காமெடி நடிகர்கள் படம் இயக்குவது அறிதான ஒன்று தான். அந்த வகையில், ‘பெருநாளி’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் ‘சிட்டிசன்’ மணி, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது படக்குழுவினருடன் நாகர்கோவிலில் முகாமிட்டவர், தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

தற்போது, படத்தின் பின்னணி வேலைகளில் பிஸியாக இருப்பவரிடம், படம் குறித்து கேட்கையில், “தாய்மாமன் – மருமகள் செண்டிமெண்ட் தான் படம். குடும்ப உறவுகளின் செண்டிமெண்ட்டை பற்றி படம் பேசினாலும், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்துவிதமான அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும்.

சுமார் 30 ஆண்டுகளாக சினிமாவில் பல துறைகளில் பணியாற்றியிருக்கிறேன். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து, சரியான முறையில் திட்டமிட்டு இப்படத்தை குறுகிய காலத்தில் முடித்திருக்கிறேன். விரைவில் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் இறங்க இருக்கிறேன்.” என்றார்.

தஷி இசையமைப்பில் 6 பாடல்கள் இடம்பெற்றிருக்கும் இப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநால் கொண்டாட்ட பாடல் ஒன்றும் இடம்பெற்றிருக்கிறதாம். கானா உலகநாதன் பாடியிருக்கும் இந்த பாடல், இதுவரை இல்லாத அளவுக்கு ஜெயலலிதாவின் புகழை இப்பாடலில் சொல்லியிருக்கிறார்களாம். ஆர்.குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார். தீப்பொறி நித்யா சண்டைப்பயிற்சியை கவனித்துள்ளார். படத்தொகுப்பை பன்னீர் கவனிக்கிறார்.

மேலும், இப்படத்தில் காமெடி நடிகர் கிரேன் மனோகர், சிறந்த குணச்சித்திர நடிகராக பலரது பாராட்டுக்களை பெரும் விதத்தில் முக்கிய கதாபத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறாராம். இதுவரை பார்க்காத ஒரு கிரேன் மனோகர் இதில் பார்க்கலாமாம். அதேபோல், படத்தின் ஹீரோயின் மதுனிக்கா கொடுத்த ஒத்துழைப்பும் படப்பிடிப்பு விரைவாக முடிய ஒரு காரணமாம்.

சிசர் மனோகர், கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க, ஏராளமான காமெடி நடிகர்களும் நடித்திருக்கும் இப்படத்தை ரோஷினி கிரியேஷன்ஸ் சார்பில் மார்கிரேட் அந்தோணி தயாரிக்கிறார்.