ஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்

சவுண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றவுடன், கேரளாவின் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறுகிறார்.

அதன்படி நண்பர் ஒருவர் மூலமாக பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்து அதை ஆவண படமாக உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கான வேலைகளில் ஈடுபடும் போது, ரசூல் பூக்குட்டிக்கும், அவரது நண்பருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அந்த ஆவண படம் தயாரிப்பது கைவிடப்படுகிறது.

இருந்தாலும், தானே அந்த ஆவண படத்தை தயாரிக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபடுகிறார் ரசூல். இந்நிலையில், அவருக்கு பல்வேறு வழிகளில் பிரச்சனைகள் வருகிறது. இதையெல்லாம் ரசூல் பூக்குட்டி எப்படி சமாளித்தார்? பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்தாரா? என்பதே படத்தின் அடுத்த பாதி.

சவுண்ட் டிசைனராக ரசிகர்களை கவர்ந்த ரசூல் பூக்குட்டி, இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இப்படத்திற்காக இவரின் உழைப்பு அபாரம். சிறந்த தொழில்நுட்பத்துடன் கூடிய திரையரங்குகளில் இப்படத்தை பார்த்தால், நுணுக்கமான ஒலிகளை கூட ரசிக்க முடியும். அந்தளவிற்கு சிறப்பான ஒலிகளை கொடுத்திருக் கிறார்கள்.

சாதாரண திரையரங்குகளில் பார்த்தால், இப்படத்திற்கான உழைப்பு உங்களுக்கு தெரியாமல் போய்விடும். கமர்ஷியல் படம் ரசிப்பவர்களுக்கு இப்படம் பிடிக்காது.

அனியன் சித்ரஷாலா மற்றும் நீல் டி குஹன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழாவை நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார்கள். ராகுல் ராஜ்ஜின் இசையும் ரசிக்க வைத்திருக்கிறது.

‘ஒரு கதை சொல்லட்டுமா’  சிறந்த ஒலி.