குப்பத்து ராஜா – விமர்சனம்

வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ், குப்பத்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தலைவர் போல் செயல்பட்டு வருகிறார் பார்த்திபன். ஜி.வி.பிரகாஷின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கரும், பார்த்திபனும் நண்பர்கள். தொடக்கத்தில் இருந்தே ஜி.வி.பிரகாஷுக்கும், பார்த்திபனுக்கும் மோதல் இருக்கிறது.

அதே குப்பத்தில் வசித்து வரும் நாயகி பல்லக் லால்வானியும், ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் வீட்டுக்கு அருகில் குடிவருகிறார் பூனம் பாஜ்வா. இவரால் காதலர்களான ஜி.வி.பிரகாஷ் – பல்லக் லால்வானி இடையே அடிக்கடி சண்டை வருகிறது.

அந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கும் கிரணை பொது இடத்தில் வைத்து எம்.எஸ்.பாஸ்கர் கிண்டல் செய்கிறார். மறுநாளே எம்.எஸ்.பாஸ்கர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார் என்று தெரியாமல் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் குழம்பி இருக்கின்றனர். அதேபோல் அந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவனும் மர்மமான முறையில் காணாமல் போகிறான்.

கடைசியில், எம்.எஸ்.பாஸ்கரை கொலை செய்தது யார்? காணாமல் போன சிறுவன் என்னவானான்? ஜி.வி.பிரகாஷ் – பல்லக் லால்வானி இணைந்தார்களா? என்பதே குப்பத்து ராஜாவின் அடுத்த பாதி.

நடிப்பில் புதிய பரிணாமத்தை காட்டி வரும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் வடசென்னை இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். குப்பத்து தலைவனாக பார்த்திபன் தனது வழக்கமான நக்கலுடன் அதகளப்படுத்தியிருக்கிறார். சிறப்பான நடிப்பு. பல்லக் லால்வானி தைரியமான வடசென்னை பெண்ணாக தமிழில் நல்ல அறிமுகத்தை பெற்றிருக்கிறார். பூனம் பாஜ்வா கவர்ச்சி தோற்றத்தில் வந்து செல்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் உடன் பெரும்பாலான காட்சிகளில் வரும் யோகி பாபுவின் காமெடியும் பெரிதாக எடுபடவில்லை. சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஆர்.என்.ஆர்.மனோகர், கிரண், அஜய் ராஜ், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

நடன இயக்குநராக இருந்து திரைப்பட இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் பாபா பாஸ்கருக்கு வாழ்த்துக்கள். வடசென்னையில் உள்ள ஒரு குப்பத்தில் நடக்கும் சில சம்பவங்களை கோர்த்து படத்தை இயக்கியிருக்கிறார். எனினும் அந்த சம்பவங்கள் படத்திற்கு பெரிதாக உயிர் கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். வடசென்னை பேச்சும் இயல்பானதாக தோன்றவில்லை, பெரும்பாலான இடங்களில் நாடகம் போல் தோன்ற வைக்கிறது. குப்பத்தில் நடப்பவற்றை மிகைப்படுத்தி காட்டியிருப்பது போல் தோன்றுகிறது. படத்தின் படத்தொகுப்பு, கலை பணிகள் சிறப்பு.

ஜி.வி.பிரகாஷ் இசையில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

`குப்பத்து ராஜா’ அரியணை இல்லை.