திருமணம் – விமர்சனம்

நடிகர் உமாபதி

நடிகை     காவ்யா சுரேஷ்

இயக்குனர் சேரன் பாண்டியன்

இசை சித்தார்த் விபின்

ஓளிப்பதிவு ராஜேஷ் யாதவ்

 

ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா. அவரது தம்பி உமாபதி. இவரும், காவ்யா சுரேசும் காதலிக்கிறார்கள். காவ்யாவின் அண்ணன் சேரன். குடும்ப பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்டு நேர்மையானவராக இருக்கிறார்.

 

இந்த நிலையில், காவ்யா தனது காதலை குடும்பத்தாரிடம் தெரிவிக்க, இரு வீட்டாரும் சந்தித்து பேசுகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய வேலையில் இரு வீட்டாரும் ஈடுபடுகிறார்கள். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது தம்பியின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று சுகன்யா விருப்பப்படுகிறார். ஆனால் தனது சக்திக்கு ஏற்ப மனநிறைவோடு தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க நினைக்கிறார் சேரன். இவர்களது மாறுபட்ட எண்ணத்தால் உமாபதி – காவ்யா திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

 

இந்த பிரச்சனைகளை கடந்து, உமாபதி – காவ்யா திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதை புரிதலோடு காட்டியிருப்பதே படத்தின் மீதிக்கதை.

 

சேரன் ஒரு அண்ணனாகவும், நேர்மையான, சாதாரண குடும்ப தலைவனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். உமாபதி, காவ்யா சுரேஷ் இருவருமே கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துவிட்டு செல்கின்றனர். தம்பிக்காக வாழும் அக்காவாக சுகன்யா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களது பணியை திருப்திகரமாக செய்திருக்கின்றனர்.

திருமணத்தை சாதாரணமாக நடத்திவிட்டு, வாழ்க்கையை மேன்மையோடு வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சேரன். ஆடம்பரமாக திருமணம் செய்துவிட்டு வாழ்க்கையில் கஷ்டப்படுவதற்கு பதிலாக, தேவையற்ற செலவை குறைத்து சிக்கனமாக திருமணம் செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார். திருமணத்திற்கான தேவையில்லாத ஆடம்பர செலவுகளை மணமக்களின் வளர்ச்சிக்காக செலவிடலாம் என்பதை தனது பாணியில் கூறியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் திரைக்கதையின் வேகத்தை கொஞ்சம் கூட்டியிருக்கலாம். முடிவில் இயற்கை விவசாயமும் அதனால் கிடைக்கும் உணவுப் பொருட்களும் அவசியம் என்பதை புரிய வைத்திருக்கிறார்.

 

சித்தார்த் விபினின் பின்னணி இசை சிறப்பு. பாடல்களும் கேட்கும் ரகம் தான். ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது.

 

மொத்தத்தில் `திருமணம்’ தேவை