அரவிந்த்சாமியை வெட்கப்பட வைத்த நடிகர்!

செகண்ட் இன்னிங்கில் வில்லனாக என்ட்ரி கொடுத்த அரவிந்த்சாமி மீண்டும் ஹீரோவாகி வருகிறார். துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் என்ற சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆகஸ்ட் 31-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி சென்னையில் நடைபெற்றது.

அப்போது அரவிந்த்சாமி பேசும்போது, இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக சொன்னார்.

அதோடு, கார்த்திக் நரேன் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, எனக்காக கதையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம். உங்கள் கதைக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன். கதையில் அனைத்து கதாபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுக்கு மாறு சொன்னேன் என்று கூறிய அரவிந்த்சாமி, நரகாசூரன் படம் ஹாலிவுட் பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு கிப்ட் என்றுதான் நான் சொல்வேன் என்கிறார்.

அவரைத் தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் பேசும்போது, இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் கதையே கேட்கவில்லை. இப்போதுவரை எனக்கு கதை தெரியாது என்றார். மேலும் இந்த நரகாசூரன் படத்தில் அரவிந்த்சாமி சாருடன் நான் நடிக்கப்போவதாக என் வீட்டில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போது என் அம்மா, எனக்கு அரவிந்த்சாமியை ரொம்ப பிடிக்கும். ஒருநாள் ஸ்பாட்டிற்கு என்னையும் கூட்டிக்கொண்டு போ என்று சொன்னார். அவரைத் தொடர்ந்து என் தங்கையும், அரவிந்த்சாமி ரொம்ப அழகாக இருப்பார். அவரை ஒருமுறையேனும் நேரில் பார்க்க வேண்டும். அதனால் என்னையும் ஒருநாள் படப்பிடிப்பு தளத்துக்கு கூட்டிட்டுப்போ என்றார்.

ஆக, நான் வீட்டிலேயே ஒரு நடிகன் இருக்கிறேன். என்னை மறந்து விட்டு அரவிந்த்சாமியை பார்க்க வேண்டும் என்றார்கள். அது எனக்கு பொறாமையாக இருந்தது. அந்த அளவுக்கு இத்தனை வயதிலும் அனைவரையும் கவர்ந்த நடிகராகயிருக்கிறார் அரவிந்த்சாமி என்றார் சந்தீப் கிஷன்.

இப்படி அவர் சொன்னதை கேட்டபடி மேடையில் அமர்ந்திருந்த அரவிந்த்சாமி, நிஜமாலுமே வெட்கத்தில் நெளிந்து கொண்டிருந்தார்.