2.0

எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் 2.0 படத்தின் முதல் காட்சியிலேயே அக்‌ஷய் குமார் மொபைல் டவர் ஒன்றில் தூக்குப்போட்டு இறக்கிறார். அவரது இறப்புக்கு அடுத்த நாள் மர்மமான முறையில் செல்போன்கள் அனைத்தும் வானை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. திடீரென செல்போன்கள் அனைத்தும் பறந்ததால் மக்கள் அனைவரும் பீதியில் உறைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், செல்போன் கடை வைத்திருக்கும் ஐசரி கணேஷ் இந்த நேரத்தில் அனைத்து செல்போன்களையும் விற்று லாபம் பார்க்க எண்ணி, புதிய மொபைல்களை வரவைக்கிறார். அந்த போன்களும் காணாமல் போகின்றன. மேலும் ஐசரி கணேஷ் மர்மமான முறையில் இறக்கிறார்.

இந்த நிலையில், இந்த பிரச்சனைகள் குறித்து தனது ஆராய்ச்சியை தொடங்குகிறார் (விஞ்ஞானி வசீகரனான) ரஜினிகாந்த். ரஜினிக்கு துணையாக அவரது புதிய ரோபோவான ஏமி ஜாக்சன் உதவி செய்கிறது. இவர்களது ஆராய்ச்சியில் அனைத்து மொபைல்களையும் கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று வந்துள்ளது என்றும், மனிதர்களுக்கு எதிராக இது செயல்படுகிறது என்பதும் தெரிய வருகிறது.

இதையடுத்து நடக்கும் உயர்மட்டகுழு ஆலோசனையில், வந்திருப்பது பயங்கரமான சக்தி, சிட்டி வந்தால் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என்று ரஜினி கூறுகிறார். எந்திரன் படத்தில் வசீகரனின் குருவான போஹ்ரா சிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார். அதேபோல் இந்த பாகத்தில் அவரது மகன் சுதஸ்னு பாண்டே எதிர்ப்பு தெரிவிக்கிறார். சிட்டியால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், சிட்டிக்கு ஆதரவு குறைகிறது. இந்த நிலையில், மேலும் சில பிரபலங்கள் உயிரிழக்க சிட்டியை மீண்டும் கொண்டுவர முடிவு செய்கின்றனர்.

சிட்டியின் வருகைக்கு பிறகு அந்த மாய சக்தி மனிதர்களை தாக்க ஆரம்பிக்கிறது. பறவையாக மாறி வரும் அந்த சக்தியால் மேலும் பல்வேறு சேதங்கள் ஏற்படுகின்றன. மேலும் இந்த சண்டையில் சிட்டி அழிக்கப்படுகிறது.

கடைசியில், அந்த பறவையை கட்டுப்படுத்தியது யார்? மாய சக்தியான பறவை அழிக்கப்பட்டதா? அக்‌ஷய் குமார் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

வசீகரன், சிட்டி, எந்திரன் 2.0, 3.0 என வித்தியாசமாக ரோபோக்களாக ரஜினிகாந்த் கலக்கியிருக்கிறார். வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் அக்‌ஷய் குமார். திரையில் குறைவான நேரமே வந்தாலும், உணர்வுப்பூர்வமாக நம்மை கலங்க வைக்கிறார். ரோபோவாக ஏமி ஜாக்சனும் அவரது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

சுதஸ்னு பாண்டே, அடில் உசைன், கலாபவன் ஷாஜன், மயில்சாமி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

படம் அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கிறது. குறிப்பாக தமிழில் முழுநீள 3டி படத்தை  பார்க்கும் போது வித்தியாசமான, புதுமையான உணர்வை ஏற்படுத்துகிறது. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அளவுக்கு பிரம்மாண்டமான படைப்பை கொடுத்திருக்கும் ஷங்கருக்கு பாராட்டுக்கள். படத்தில் கிராபிக்ஸ், வி.எப்.எக்ஸ். காட்சிகள் பிரம்மாண்டத்தை உணர வைக்கின்றன. கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பது ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் கதாபாத்திரங்களுக்கு பெரியதாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையோ என்ற ஏமாற்றத்தை உண்டுபண்ண வைக்கிறது. திரையில் அக்‌ஷய் குமாரின் தோற்றத்தை விட பறவையின் தோற்றமே வந்து விளையாடி சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு பறவையை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் ஷங்கர். 

ரஜினியை மாஸாக பார்க்க வேண்டும் என்றோ, வித்தியாசமான அக்‌ஷய் குமாரை பார்க்க வேண்டுமென்றோ சென்றால் அது ஏமாற்றத்தை தான் கொடுக்கும். இது ரஜினி படம் அல்லது அக்‌ஷய் குமார் படம் என்று கூறுவதை விட இது ஷங்கர் படம் எனலாம். அந்த அளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் மொத்த பிரம்மாண்டத்தையும் இறக்கியிருக்கிறார். அத்துடன் கிளைமேக்ஸில் அடுத்த பாகத்திற்கான சஸ்பென்ஸையும் இணைத்திருப்பது ரசனை.

ஆர்.ரஹ்மான் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். ரசூல் பூக்குட்டியின் 4டி ஆடியோ சவுண்ட் அபாரம். இருவரும் இணைந்து இசையில் அடுத்த லெவலுக்கே சென்றிருக்கின்றனர். நிரவ் ஷாவின் 3டி ஒளிப்பதிவு உண்மையான விஷுவல் ட்ரீட் தான்.

2.0′ மிகப் பிரம்மாண்டம்.