ரஜினிகாந்த் படத்தை தடைசெய்ய கோரி ரஜினிகாந்தே வழக்கு!

rajini”மே ஹூன் ரஜினிகாந்த்” என்ற இந்தி படத்திற்கு தமது அனுமதியின்றி தனது பெயரை பயன்படுத்தியுள்ளதாக கூறி அப்படத்தை தடை விதிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்சினிமாவின் நம்பர்-1 நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்தியில் பைசல் சைப் இயக்கத்தில், ”மே ஹூன் ரஜினிகாந்த்” என்ற பெயரில் இந்திப்படம் ஒன்று தயாராகி வருகிறது. ஜே.ஜே, பில்லா, சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஆதித்யா மேனன், இப்படத்தின் மூலம் இந்தியில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக கவிதா ரதேஷியம் நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் இப்படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் “மே ஹூன் ரஜினிகாந்த்” என்ற இந்தி படத்தில், தமது அனுமதியின்றி, தனது பெயரை பயன்படுத்தியுள்ளதாகவும், படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் தரப்பில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன், படத்தை வரும் 25ம் தேதி வரை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.