ரசிகர்களுக்காகவே பிரமாண்ட படம் எடுக்கிறேன்! -ஷங்கர்

shankar1_1717334f‘ஐ’ படத்தின் நாயகனாக நடிகர் விக்ரமை தவிர வேறொரு நடிகர் நடித்திருப்பாரா என்பது சந்தேகமே என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

‘ஐ’ படத்துக்காக விக்ரமின் ஒத்துழைப்பு என்னை வியக்க வைத்தது. வேறு ஒரு நடிகர் இப்பாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பாரா என்பது சந்தேகமே. இப்படத்தில் நடிப்பதற்காக நான் விக்ரமை மட்டுமே அணுகினேன். தற்போது நாங்கள் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். தலையை மொட்டையடிக்க வேண்டும் என்றவுடன், வேறொரு நடிகராக இருந்தால் தயங்கி இருப்பார். ஆனால், விக்ரம் ‘ஐ’ படத்திற்காக எதையும் செய்யத் தயாராகவே இருந்தார்.

இப்படத்திற்கு ஏன் அதிக பட்ஜெட் என்பது நீங்கள் திரையில் பார்த்தால் தெரியும். தற்போது ரசிகர்கள் தொலைக்காட்சியில் அதிகமான படங்களைப் பார்த்து நாளுக்கு நாள் மாறியிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பெரிய பெரிய விஷயங்களை எதிர்பார்த்து திரைப்படத்திற்கு வரும் ரசிகர்களை நாம் திருப்திப்படுத்த வேண்டும். பிரம்மாண்டத்தை எதிர்பார்த்துதான், எனது படத்திற்கு வருகிறார்கள். அவர்களை நான் திருப்திபடுத்த வேண்டும்.

சீன மொழியில் படத்தை டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டது தயாரிப்பாளரின் எண்ணம்தான். நாங்கள் சீனாவில் படப்பிடிப்பு நடத்தும்போதே, அங்குள்ள மக்கள் படத்தைப் பார்க்க விரும்பினார்கள்.

ரசிகர்கள் என்னிடம் சின்ன பட்ஜெட் படங்களைக் காண விரும்பினால், இயக்கத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால், ஷங்கரிடம் இருந்து பிரம்மாண்டத்தைதான் விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வதைதான் நான் செய்துக்கொண்டிருக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குவது போர் அடிக்கும்போது சிறு பட்ஜெட் படங்கள் இயக்குவேன்.

ஆனால், பெரிய பட்ஜெட் படங்கள் இயக்குவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய கற்பனைக்கு பிரம்மாண்டமான பட்ஜெட் தேவைப்படுகிறது” என்று ஷங்கர் தெரிவித்துள்ளார்.