யான் படம் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட கதையா?

Ravi-K-Chandranபிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் முதன்முதலாக இயக்கி வரும் படம் யான். ஜீவா- துளசி நடித்துள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. சமீபத்தில்தான் மொராக்கோவில் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு நாடு திரும்பியுள்ளது யான் யூனிட்.

இந்த நிலையில், அப்படத்தில் உலகளாவிய மனித உரிமை மீறல்களை மையப்படுத்தி கதை பண்ணியிருப்பதாக அப்படக்குழு சார்பில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அந்த மனித உரிமை மீறல், விடுதலைப்புலிகளுக்கும். இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போரில், பிரபாகரனின் மகன் பாலசந்திரன் கொல்லப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியுள்ளது.

ஆனால், இந்த செய்தியினால் அதிர்ச்சியடைந்துள்ளார் ரவி கே.சந்திரன். காரணம், சமீபத்தில்தான் இனம் என்ற படத்தை இயக்கி இன்னொரு கேமராமேனான சந்தோஷ்சிவன் பிரச்சினையில் சிக்கினார். அந்த படத்தை வெளியிட்டால் பெரிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று தியேட்டர்களில் திரையிட்ட சில நாட்களிலேயே படத்தை திரும்பப் பெற்றனர்.

அதனால், தனக்கும் அதுபோன்ற பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்று உஷாராகி விட்ட அவர், யான் படத்திற்கும் இலங்கை போருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது உலகளாவிய வேறொரு மனித உரிமை மீறலைப்பற்றிய கதையில் உருவாகியிருககிறது. அதனால், யான் படத்தைப்பற்றி தவறான செய்தி பரப்பி பிரச்சினையை உண்டு பண்ணாதீர்கள் என்று ரவிகே.சந்திரன் கேட்டுக்கொண்டு வருகிறார்.