மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது பக்க விளைவுகளும் அதிகரிக்கும்!

medicieநம் நாட்டின் மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை பத்து கோடி. இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 20 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் 60 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் இரண்டுக்கு மேற்பட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அன்றாடம் அதிக அளவு மாத்திரை உட்கொள்பவர்களாகவே உள்ளனர். மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, பக்க விளைவுகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், முதியோர் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது…’’ என்கிறார் முதியோர் நல மருத்துவர் பிரபாகரன். முதியோருக்கான மருந்து, மாத்திரை விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவற்றைப் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் அவர்.

பல முதியவர்களிடம் மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக்கேற்ப மருந்து, மாத்திரைகள் உட்கொள்கிற வழக்கம் இல்லை. ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தாங்களாகவே மருந்துக்கடைகளில் வாங்கி சாப்பிடு கிறார்கள். இதன் காரணமாக, பக்க விளைவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. வயதானவர்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பலவகை நோய்களுக்கான மருந்துகளாக பல வண்ணங்களில் இருப்பதைக் காணலாம். பெரும்பாலான முதியவர்கள் எந்த வகை மாத்திரை எந்த வகை நோய்க்கு என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த மாத்திரைகளால், என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என அறியாதவர்களாக இருப்பார்கள்.

ஒரு மருந்தின் பக்க விளைவை மற்றொரு நோயாக எண்ணி, அதற்கு வேறொரு மருந்தை சாப்பிடத் தொடங்குகின்றனர். அது மேலும் பலவிதமான பக்க விளைவுகளை உண்டாக்கும். இதனை, மருத்துவர்கள் Prescription Cascade என்று குறிப்பிடுவார்கள். ஆகவே, முதியவர்கள் மருந்தின் உபயோகத்தை தெரிந்து கொள்வது எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல, பக்க விளைவுகளையும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.

ஒருசில பக்க விளைவுகள் ஏற்படும்போது, அந்த மாத்திரையை மாற்ற வேண்டி இருக்கும். சில பக்க விளைவுகள் சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமலே தானாகவே மறைந்து விடும். உதாரணத்துக்கு நீரிழிவு, நரம்புப் பிரச்னை, மனச்சோர்வு ஆகியவற்றுக்காக எடுத்துக்கொள்ளும் Amitriptyline மாத்திரையால் வயதான ஆண்களுக்கு சிறுநீர் பாதையில் அடைப்பு வர வாய்ப்பு உள்ளது. ரத்த அழுத்தத்துக்காக சாப்பிடும் Enalapril மாத்திரை வறட்டு இருமலை ஏற்படுத்தலாம்.

நோயின் எல்லாவிதமான அறிகுறிகளும் முதிர்ச்சியால் ஏற்படுவது என்றோ, ‘முதுமை காரணமாக இப்படித்தான் இருக்கும்’ என்றோ நினைக்கக்கூடாது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, முதல் முறை மருந்துகள் சாப்பிட ஆரம்பிக்கும்போது, ஒருசில மருந்துகளால் மயக்கம் ஏற்படலாம். அதனால், படுக்கை மற்றும் நாற்காலியில் இருந்து சட்டென்று எழுந்திருக்காமல், சிறிதுநேரம் உட்கார்ந்து குதிகால்களை நன்றாக அசைத்துவிட்டு, பின் எழுந்தால் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.

ரத்த அழுத்தத்துக்காக எடுத்துக்கொள்ளும் வேறுசில மருந்துகள் கால் வீக்கத்தை ஏற்படுத்தும். வறட்டு இருமல், வயிற்றுக் கோளாறும் வரும். அப்படி வரும்பட்சத்தில், உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். சில மருந்துகள் மலச்சிக்கலை உண்டாக்கக் கூடியவை. உணவில் காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்வதன் மூலமும், தண்ணீர் நிறைய குடிப்பதாலும் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.

நீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறையும் அபாயம் உள்ளது. சர்க்கரை அளவு குறைந்தால் படபடப்பு, மயக்கம், நடுக்கம், சோர்வு, பசி ஆகியவை அதிகமாகும். அதிக வியர்வை, கை, கால்களில் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அதுபோன்ற நேரங்களில் தாமதிக்காமல் இனிப்பு உள்ள தின்பண்டங்களை கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.

இதய பாதிப்புகளுக்காக சாப்பிடும் மாத்திரையால் குடல் புண், வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இந்த மருந்துகளை உணவுக்குப்பின் எடுத்துக்கொள்வது நல்லது. சில வகை இதய நோய் மருந்துகள் தலைவலி மற்றும் மயக்கத்தை உண்டாக்கலாம். அப்போதும் மருத்துவரை அணுக வேண்டும். தூக்கமின்மைக்காக பயன்படுத்தும் மாத்திரைகளால் மயக்கம், பகலில் தடுமாற்றம் ஏற்படலாம். வயதானவர்கள் தூக்க மாத்திரையை தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை.

வலிக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் சிறுநீரகம் மற்றும் இதயத்தில் பாதிப்பு, குடல் புண் போன்றவற்றை உண்டாக்கலாம். அவற்றைத் தவிர்த்து, பிசியோதெரபி முறையில் தீர்வு காணலாம். மனச்சோர்வு, நரம்பு பிரச்னைகளுக்கான மருந்துகளால் வாயில் வறட்சி, மலச்சிக்கல், மயக்கம் ஏற்படலாம். எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகள் தீர்வாகாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த ஒரு மருந்தையும் உபயோகிக்க ஆரம்பிக்கும்முன், அதனால் ஏற்படும் பயன்கள், பக்க விளைவுகள் ஆகியவற்றை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மருந்து மற்றும் மாத்திரைகளே மருத்துவம் என்ற எண்ணத்தை முதியவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். வாழ்வியல் முறை மாற்றத்தால் நோய்களைக் குணப்படுத்தலாம்.’’