பாரதிராஜாவுக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டீசு

P.Bharathiraja at Vishwaroopam on DTH Platform Press Meet Stills2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. கேரள சினிமா துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அதனை அறிவித்தார்.

சிறந்த படமாக 2013-ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கிய ‘சி.ஆர்.நம்பர் 89’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகர்களாக 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆர்டிஸ்டு, நார்த் 24 காதம் படத்தில் நடித்த பகத் பாசில், அயாள் மற்றும் சக்கரியாயுடெ கர்ப்பிணிகள் படத்தில் நடித்த லால் ஆகியோரும், சிறந்த நடிகையாக ஆர்டிஸ்டு படத்தில் நடித்த ஆன் அகஸ்டினும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2013-ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், எனவே, விருதுகள் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தேசிய விருது பெற்ற பேரறியாதவர் என்ற படத்தின் தயாரிப்பாளர் அனில் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட 85 திரைப்படங்களையும் தேர்வுக்குழு தலைவராக இருந்த பாரதிராஜா மற்றும் உறுப்பினர்கள் முழுமையாக பார்க்காமல் அவசர கோலத்தில் சிறந்த படங்களையும், நடிகர்-நடிகைகளையும் தேர்வு செய்துள்ளனர். எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும்’’ என்று அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

அவர் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முஸ்தாக் அகம்மது தலைமையில் நடைபெற்றது. விசாரணையினை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘‘தேர்வுக்குழு தலைவர் பாரதிராஜா, நடிகையும் தேர்வுக்குழுவின் உறுப்பினருமான ஜலஜா உள்பட 7 உறுப்பினர்கள் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் பிரியதர்ஷன், செயலாளர் எஸ்.ராஜேந்திரன்நாயர், கலாசார துறை செயலாளர் ஆகியோருக்கு 10 தினங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.