பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டிய ராம்கோபால் வர்மா!

ram gopal varma stills - bஎதையாவது சொல்லியோ, சமூக வலைத்தளங்களில் எதையாவது எழுதியோ, அல்லது அறிக்கை என்ற பெயரில் மற்றவர்களைத் தரக்குறைவாக திட்டியோ எழுதியே பழக்கப்பட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம்கோபால் வர்மாவுக்கு ஆந்திர திரைப்பட பத்திரிகையாளர்கள் மொத்தமாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். அவர் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘ஐஸ் க்ரீம்’ என்ற படத்திற்கு சினிமாவைப் பற்றித் தெரியாதவர்கள் விமர்சனம் எழுதுகிறார்கள். என்னுடன் விவாதத்தில் பங்கு பெறத் தயாரா, அப்படி வரவில்லையென்றால் அவர்கள் இருட்டில் இருந்து கொண்டு குரைக்கும் நாய்கள் என்றெல்லாம் பத்திரிகையாளர்களைப் பற்றி கண்டபடி சொல்லியிருந்தார் ராம்கோபால் வர்மா.

அதைத் தொடர்ந்து ஒன்று கூடிய அனைத்து பத்திரிகையாளர்களும் ராம்கோபால் வர்மாவுக்கு மொத்தமாகத் தடை விதிக்க முடிவு செய்துள்ளனர். இதன் முலம் இனி எந்த பத்திரிகையிலும், இணையதளங்களிலும் அவரைப் பற்றிய செய்தியோ, புகைப்படங்களோ எதையும் வெளியிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளனர். இதனிடையே பத்திரிகையாளர்களின் முடிவால் அதிர்ச்சியுற்ற ராம்கோபால் வர்மா, நான் அனைவரையும் அப்படிச் சொல்லவில்லை, குறிப்பிட்ட ஒரு இணையதளத்தைப் பற்றி மட்டும்தான் சொன்னேன் என வேறு ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்.

இருந்தாலும், இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதால் இனி யாரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்ற காரணத்தால் ஏகமனதாக இந்த முடிவை ஆந்திர திரைப்படப் பத்திரிகையாளர்கள் எடுத்துள்ளார்கள். இருந்தாலும் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஒரு சிலர் இந்த விவகாரத்தில் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.