பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்! – சீனு ராமசாமி

seenu-ramasamy‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களை இயக்கிய சீனுராமாசாமி தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்சேதுபதி-விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா பாடப்போவதாக செய்தி வெளிவந்தது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் சீனுராமாசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறும்போது,

‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தில் தத்தெடுத்த மகனைப் பற்றிய உறவை மையப்படுத்தி ஒரு தாயின் பாடல் இடம்பெறுகிறது. இதைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுத, யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இந்தப் பாடலை யாரைப் பாடவைக்கலாம் என்ற யோசனையில் என் ஆழ்மனதில் தோன்றியவர் இசைஞானி இளையராஜா.

இதை இப்படத்தின் இசை அமைப்பாளர் யுவனிடமும், தயாரிப்பாளர் லிங்குசாமியிடமும் தெரியப்படுத்தினேன். யுவன் தன் அப்பாவிடம் நான் கேட்கிறேன் என்றார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே’ மாதிரியான ஒரு பாடலை இசைஞானி பாடினால் எப்படி இருக்கும்! ஆனால் சில நண்பர்கள் இதனை வேறுமாதிரித் திரித்து எழுதிவருகின்றனர். இதைப் பகை முற்றுப்பெற்ற காலமாக நான் பார்க்கிறேன்.

இரண்டு பெருங்கலைஞர்களின் பெருந்தன்மை சம்மந்தப்பட்ட விஷயம் இது. நான் இருவரிடமும் வரம் கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன். ‘பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்!’ – என்ற பாரதியின் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன. இணைத்து வைக்கும் கரங்களே, என்னை ஆசீர்வதியுங்கள்! என்று கூறியுள்ளார்.