தலைவர்களின் பெயர்களை படங்களுக்கு வைக்கும்போது எச்சரிக்கை தேவை! – அமீர்

thuruvaதலைவர்களின் பெயர்களை படங்களுக்கு வைக்கும்போது எச்சரிக்கை தேவை என்று ஒரு பட விழாவில் இயக்குநர் அமீர் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு-

பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் துருவா நடிக்கும் படம் ‘திலகர்’. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஜி.பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள படம் இது. ராஜேஷ்யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கண்ணன் இசையமைத்துள்ளார். மதியழகன், நாசே ஆர். ராஜேஷ், ரம்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

‘திலகர்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை சாந்தம் திரையரங்கில் நடைபெற்றது. இசையை வெளியிட்டு அமீர் பேசும்போது…

இந்தப் படத்தில் யாரையும் எனக்குத் தெரியாது. இருந்தும் வந்திருக்கிறேன்.நான் இங்கு வர இரண்டு காரணங்கள். ஒன்று சுரேஷ் காமாட்சி. அவர்தான் அழைப்பிதழ் கொடுக்க வந்தார். இன்னொரு காரணம் கலைப்புலி தாணு சார். ஒரு காலத்தில் ஃபெப்ஸி க்காக ஒரு பிரச்சினையில் எங்கள் இருவருக்கும் இணக்கமில்லாமல் இருந்தது. விழாக்களில் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் குறுக்கிட்டுக் கொண்டு கடந்து போவோம். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் நண்பர்களாகி. விட்டோம். இப்போது எங்களை யாரும் பிரிக்கமுடியாத அளவுக்கு நண்பர்களாகிவிட்டோம்.
எனக்கும் நீது சந்திராவுக்கும் ‘யுத்தம்செய்’ படத்தில் பாடலில் நடித்த பிறகு 4 வருடமாக நல்ல நட்பு நிலவுகிறது. . அவரும் அழைத்தார் முன்பே வந்து விட்டால் அவருக்காக அமீர் வந்தார் என்பார்கள். எனவே காருக்குள் காத்திருந்தேன், கருபழனியப்பன் வரும்வரை.
நான் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தாமதமாகப் போவேன். காரணம் ஃபெப்ஸி சங்கச் செயல்பாடுகள். இப்போது அதில் இல்லை.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் பார்த்த போது ‘திலகர்’ என்று போட்டு கையில் அரிவாளுடன் நிற்பது போலிருந்தது. ‘திலகர்’ என்று போட்டு படத்தை சாந்தமாகப் போட்டிருக்கலாம்.

எனக்குத் தெரிந்து மதுரை ஆழ்வார் நகரில் காந்தி என்றொருவர் இருந்தார். அவர் சாராயம் காய்ச்சுவார். கரிமேட்டில் இன்னொரு காந்தி இருந்தார் கட்டை பஞ்சாயத்து செய்வார்.

இன்னொரு செட்டியார் குடும்பத்தில் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு திலகர், கோகலே என்றுபெயர் வைத்தார். அந்த திலகர் ஒயின்ஷாப்பில் கணக்கு வைக்கிற அளவுக்கு குடிகாரர்.

தலைவர்கள் பெயரை வைக்கிறவர்கள் எல்லாம் இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பேன். பெயர் வைக்கும் போது அதைக்காப்பற்ற வேண்டும்.

தலைவர் திலகர் பற்றி இன்று நாய் செயின் போல கழுத்தில் அடையாள அட்டைமாட்டிக் கொண்டிருக்கும் ஐடி தலைமுறைகளுக்குத் தெரியாது:

எனவே தலைவர் பெயரைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாகப் பயன் படுத்த வேண்டும். இதை திரையுலகினருக்கு ஒரு வேண்டு கோளாகவே வைக்கிறேன்”.

இவ்வாறு அமீர் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மனோஜ்குமார்,சீனுராமசாமி, கரு. பழனியப்பன்,. சமுத்திரக்கனி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், விஜய் சேதுபதி,, கிஷோர்,ஆதி,’பூ’ ராமு, நாயகன் துருவா, நடிகைகள் நாயகி மிருதுளா பாஸ்கர், நமீதா, நீதுசந்திரா, சஞ்சிதா ஷெட்டி, இனியா,ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், இசையமைப்பாளர் கண்ணன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, சுரேஷ்காமாட்சி, பாடலாசிரியர்கள் அண்ணாமலை, சாரதி ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக இயக்குநர் ஜி.பெருமாள் பிள்ளை அனைவரையும் வரவேற்றார். நிறைவாக தயாரிப்பாளர் வி. மதியழகன் நன்றி கூறினார்.