தமிழ் நாட்டில் விருது படங்களுக்கு மரியாதை இல்லை!

rajaseஇயக்குனர்கள் தாங்கள் இயக்கும் படத்துக்கு விருதுகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் ராமானுஜன் படத்தை இயக்கி வரும் ஞானராஜசேகரன் என் படத்துக்கு விருது வேண்டாம், இது விருது படம் இல்லை. கமர்ஷியல் படம் என்கிறார். அதற்கான காரணத்தை அவர் இப்படி விளக்குகிறார்.

நான் இயக்கிய மோகமுள், பாரதி, பெரியார் படத்துக்கு விருதுகள் கிடைத்தது. நான் விருதை மதிக்கிறேன். விரும்புகிறேன். ஆனால் ராமானுஜன் படத்தை விருது படம் என்று குறிப்பிடாதீர்கள். காரணம் தமிழ் நாட்டில் விருது படங்களுக்கு மரியாதை இல்லை. விருது படங்கள் என்றால் மெல்ல நகரும் கதை, போரடிக்கும் படம் என்ற இமேஜ் இருக்கிறது. படத்தை நல்லபடி பாராட்டி எழுதிவிட்டு கடைசியில் இந்தப் படத்திற்கு விருது கொடுக்கலாம் என்ற எழுதிவிட்டால் அந்தப் படத்தை பார்க்க யாரும் வரமாட்டார்கள்.

அதனால் ராமானுஜன் படத்தை விருது படம் என்று குறிப்பிட வேண்டாம். இதுவரை நான் எடுத்த படங்களிலேய அதிக செலவில் எடுக்கப்பட்டுள்ள படம். நான்கு இளைஞர்கள் அவர்கள் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை என்னை நம்பி இதில் போட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதை நான் திருப்பித் தரவேண்டும். அதற்கு உதவுங்கள். மக்களை, மாணவர்களை தியேட்டருக்கு வரச் செய்யுங்கள். அதுதான் இந்தப் படத்துக்கும், எனக்கும் நீங்கள் செய்யும் உதவி என்றார் ஞானராஜசேகரன்.