டைரக்டர் விஜய் – அமலாபால் திருமணம்!

BZ8A0024நடிகை அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் சென்னையில் திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.

அமலாபால்,’மைனா’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். ‘தெய்வத்திருமகள்’, ‘வேட்டை’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘தலைவா’, ‘நிமிர்ந்து நில்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

டைரக்டர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உள்ளார். ‘கிரீடம்’, ‘மதராசபட்டனம்’, ‘தெய்வத் திருமகள்’, ‘தாண்டவம்’, ‘தலைவா’ படங்களை இயக்கியுள்ளார். ‘தெய்வத்திருமகள்’ படத்தில் அமலாபால் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகினர். பிறகு காதல் வயப்பட்டார்கள். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இரு வீட்டு பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து கேரளாவில் அமலாபால் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று இருவரும் பிரார்த்தனை செய்தனர்.

இன்று சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. அமலாபால் பட்டு சேலை உடுத்தி இருந்தார். விஜய் வெள்ளைநிற பட்டு வேட்டி-சட்டை அணிந்து இருந்தார். அமலாபாலுக்கு 10.25 மணிக்கு விஜய் தாலி கட்டினார். வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. அப்போது திருமணத்துக்கு வந்து இருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் ஆர்யா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், அவரது மனைவி பாடகி சைந்தவி, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு வந்தவர்களை விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன், அண்ணன் நடிகர் உதயா ஆகியோர் வரவேற்றனர்.