சரத்குமார் நடிக்கும் நீ நான் நிழல்…!

sarathkumarஇன்றைய வாழ்க்கையில் பேஸ்புக் என்பது மிகவும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற சாதனமாகிவிட்டது.

இந்த பேஸ்புக் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுவது போலவே, மோசமான விஷயங்களுக்கும் பயன்படுகிறது.

மலேசியாவில் ஐந்து பேர் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். கொலைகளுக்கான காரணம் தெரியாமல் அந்த நாட்டு அரசே குழம்பிப் போகிறது. அப்போதுதான் அந்நாட்டு போலீஸ் அதிகாரிக்கு ஒரு க்ளூ கிடைக்கிறது. அதாவது ஒரு பேஸ்புக் அழைப்புதான் இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அடுத்த கொலை விழும் முன் கொலையாளியைக் கண்டுபிடிக்க முனைகிறார்.

அதேநேரம், இங்கு இந்தியாவில் ரோஹித் என்ற நபருக்கு, அதே பேஸ்புக் அழைப்பு வருகிறது. அதன்பேரில் மலேசியா கிளம்புகிறான் ரோஹித். போன இடத்தில் என்ன நடக்கிறது என்பது மீதி.

இதுதான் நீ நான் நிழல் என்ற சஸ்பென்ஸ் த்ரில்லரின் கதை. இதில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் புரட்சித் திலகம் சரத்குமார், எம்எல்ஏ. அவருடன் அர்ஜூன் லால், மனோஜ் கே ஜெயன், இஷிதா, எம்எஸ் பாஸ்கர், தேவன், ப்ளாக் பாண்டி, காதல் அருண், சூப்பர் குட் லட்சுமணன், நிகிதா, ஸ்ருதி, பகத், லட்சுமி ப்ரியா, பாத்திமா பாபு என பெரும் நட்சத்திரக் கூட்டமே படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜான் ராபின்சன். இவர் 12 ஆண்டுகள் கே எஸ் அதியமான், மேஜர் ரவி ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். படத்துக்கு நஸீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிகில் வேணு எடிட்டிங் செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். பிறைசூடன், கண்மணி ராஜா முகமது பாடல்கள் எழுதியுள்ளனர். படத்தின் வசனங்களை கண்மணி ராஜா முகமதுவே எழுதியுள்ளார்.