காமெடியிலிருந்து ஆக்சனுக்கு மாறும் ஆனைவாரி ஸ்ரீதர்!

sriவேடப்பன், ஒரு சந்திப்பில் ஆகிய படங்களை இயக்கியவர் ஆனைவாரி ஸ்ரீதர். இவர் தற்போது சோக்கு சுந்தரம் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே தனது அடுத்த பட வேலைகளிலும் தான் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார் ஆனைவாரி ஸ்ரீதர்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், வேடப்பன் படத்தை காதல், செண்டிமென்ட் கதையில் இயக்கினேன். அதையடுத்து ஒரு சந்திப்பில் படத்தை ஒரு சீரியசான கதையில் இயக்கினேன். வியாபார விசயமாக வெளியூர் செல்லும் கணவன்களுக்கு வீட்டில் இருக்கும் மனைவி மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி அப்படத்தை இயக்கினேன். திரையிட்ட இடமெல்லாம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதையடுத்து, இப்போது புதுமுகம் ராமசாமி என்பவரை நாயகனாக வைத்து சோக்கு சுந்தரம் என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். இது முழுநீள காமெடி படமாகும். வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என்று நினைக்கும் ஹீரோ, ஒரு கட்டத்தில் திருமணம் செய்யலாம் என்று ஆசைப்படுகிறார். அதுவும் காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று காதல் அம்பு தொடுக்கிறார். ஆனால் இவர் எந்தெந்த பெண்களை காதலிக்கிறாரோ அவர்களுககெல்லாம் உடனே வேறு இடத்தில் திருமணம் நிச்சயமாகி விடுகிறது ஆனால் இவருக்கு மட்டும் காதலோ, திருமணமோ செட்டாகாமல் அலைந்து கொண்டிருக்கிறார்.

இறுதியில் ஹீரோவுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் இந்த சோக்கு சுந்தரம் படத்தின் க்ளைமாக்ஸ். படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் வயிறை பதம் பார்க்கும் வகையில் இப்படத்தில் 100 சதவீதம் காமெடிக்கு கியாரண்டி உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து படமாக்கியிருக்கிறேன் என்ற சொல்லும் ஆனைவாரி ஸ்ரீதர், இதையடுத்து ஆக்சன் பிரியர்களை மனதில் கொண்டு ஒரு அதிரடி ஆக்சன் கதையை படமாக்கப்போகிறாராம். இந்த சோக்கு சுந்தரம் படம் அடுத்த மாதம் ரிலீசானதும், அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு அதிரடியாக தொடங்குகிறதாம்.