கண்களால் பயிற்சி செய்!

ht4192ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி என ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை எெலக்ட்ரானிக் திரையுடனே நாம் செலவிடுவதைக் கொஞ்சம் கவனித்தால் உணர முடியும். இதனால் இளம் வயதிலேயே கண் சார்ந்த பிரச்னைகளுக்கும், கண்ணாடி அணிய வேண்டிய நிலைமைக்கும் பலர் தள்ளப்படுகிறார்கள். ‘சில எளிய பயிற்சிகளைத் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும். கண்ணாடி போட வேண்டிய அவசியமும் இருக்காது’ என்று இப்பிரச்னைக்கு தீர்வு சொல்கிறார் கண் சிகிச்சை மருத்துவரான நவீன் நரேந்திரநாத்.

‘‘இன்று கணினித் துறையில் பலர் வேலை பார்த்து வருகிறார்கள். கண்களுக்கு போதுமான ஓய்வை இவர்கள் கொடுப்பதில்லை. எப்போதும் ஒளி ஊடுருவும் திரைகளையே அதிகம் பார்த்தபடி இருக்கிறார்கள். நவீன வகை தொலைக்காட்சி, லேப்டாப், கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன்கள் ஆகியவை ஒளி அதிகமாக ஊடுருவும் திரைகளைக் கொண்டவை. இவற்றை வெகு அருகில் பார்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கு, தூரத்தில் இருக்கும் பொருட்கள் சரியாகத் தெரியாத நிலை நாளடைவில் ஏற்படும். இந்தப் பிரச்னையை Accommodative inertia என்போம்.

அதோடு, கண்ணீர் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாமல் கண்கள் உலர்ந்து போகிற நிலையும் ஏற்படும். குளிர் சாதன அறையில் பணிபுரிகிறவர்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் வேகமாக வரும்.இவற்றைத் தடுக்க சில எளிமையான பயிற்சிகள் இருக்கின்றன. இந்த பயிற்சிகளுடன் சமச்சீரான உணவு எடுத்துக் கொள்வது கண்களை மேலும் பாதுகாத்து நலம் தரும்.வைட்டமின் ஏ அதிகமுள்ள பப்பாளி, முருங்கைக்காய், முருங்கைக்கீரை ஆகியவற்றை உணவில் போதிய அளவு சேர்த்துக் கொள்வதின் மூலம் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

Rhodopsin எனும் கண்களில் உள்ள நிறமிகள் உருவாவதற்கு வைட்டமின் ஏ மிக இன்றியமையாதது. வைட்டமின் ஏ குறைபாட்டால்தான் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது. வைட்டமின் ஏ மட்டும் அல்லாமல் வைட்டமின் சி, டி, ஈ இந்த நான்கும் சரியான அளவில் எடுத்துக் கொண்டால், வயதான காலத்தில் பார்வையை மங்கச் செய்யும் Macular degeneration பிரச்னை வராமல் பாதுகாக்கலாம்.

கண் பயிற்சி செய்வதன் மூலம் கண்களின் லென்ஸ் பவர் மாறிவிடும் என்பதோ, அதனால் கண்ணாடி அல்லது கான்டாக்ட் லென்ஸ் அணியாமல் தவிர்த்து விடலாம் என்பதோ தவறான நம்பிக்கை. பயிற்சிகள் மூலம் லென்ஸ் பவரை மாற்ற முடியும் என்பதற்கு மருத்துவ ரீதியாக இதுவரை ஆதாரம் எதுவும் இல்லை. கண்ணாடி அணிவதையோ, கான்டாக்ட் லென்ஸ் அணிவதையோ மருத்துவரின் அறிவுரைப்படி மட்டுமே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் கண்களில் இருக்கும் பிரச்னை அதிகமாகி விடலாம்…’’

1. கட்டை விரலை இரு கண்களுக்கு நேராக காட்ட வேண்டும். தூரமாக இருக்கும் பொருளை பார்த்துவிட்டு மறுபடியும் கட்டை விரலை பார்க்க வேண்டும். வலது புறம், இடது புறம் என மாறி மாறியும் இந்தப் பயிற்சியை செய்யலாம். திரும்பத் திரும்ப இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு மூன்று வேளையும் 20 முறை செய்ய வேண்டும். இதன்மூலம் தூரத்தில் இருக்கும் பொருட்கள் தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

2. கண்கள் உலர்வதைத் தடுக்க அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கண்களை மூடித் திறக்கவோ, சிமிட்டவோ வேண்டும். நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்பவர்கள் கண் சிமிட்டுவதில்லை. அடிக்கடி கண்களை சிமிட்டுவதன் மூலம் கண்ணீர் சுரப்பிகள் சரியாக வேலை செய்து, தேவையான அளவு கண்களுக்கு ஈரப்பதம் கிடைக்கும். கண் வீக்கமும் எரிச்சலும் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

3. கண்களை மேலும் கீழுமாகப் பார்ப்பது, பக்கவாட்டில் பார்ப்பது, கருவிழிகளை சுழற்றி பார்ப்பது ஆகிய பயிற்சிகளையும் வேலை நேரத்தில் தகுந்த இடைவேளைகளில் செய்து வரலாம். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தையும் இந்தப் பயிற்சி அதிகப்படுத்தும்.

4. மாறுகண் பிரச்னை கொண்ட சிலருக்கு கருவிழியானது வெளிப்புறமாகத் தள்ளி அமைந்திருக்கும். அதிகமாக புத்தகம் படிப்பவர்களுக்கும் Medial rectus என்ற தசை பலவீனமாகக் காணப்படும். இவர்கள் ஒரு பேனாவை இரு கண்களின் முன் பிடித்தபடி மெதுவாக கண்களை நோக்கி கொண்டுவர வேண்டும். பக்கத்தில் வரும்போது பேனா இரண்டாகத் தெரியும். அதை ஒரே இமேஜாக ஃபோகஸ் செய்ய வேண்டும். இப்படி 10 முதல் 20 முறை செய்ய வேண்டும். இதனால் மீடியல் ரெக்டஸ் கண் தசை வலுவடையும். கருவிழியும் வெளிப்பக்கம் தள்ளி நகராமல் நடுவில் அமைய வழிவகுக்கும்.

5. கண்களில் அதிகமாக கண்ணீர் வரும் பிரச்னை உள்ளவர்கள், இரு கண்களுக்கு இடையே உள்ள மேல் மூக்கு பகுதியில் இருந்து கீழ் நோக்கி விரல்களால் இழுத்துவிட வேண்டும். இப்பயிற்சியை குறைந்தது 10 முறை செய்தால் கண்ணீர் வருவது குறையும்.