எய்ட்ஸ் இல்லாத உலகம்! -டாக்டர் மனோரமா

ht4186எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார் குழந்தைகள் நல மருத்துவரான மனோரமா. எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி, சிகிச்சைகள், விழிப்புணர்வு கருத்தரங்கங்கள் போன்ற பணிகளைக் கடந்த 25 ஆண்டுகளாக செய்து வரும் மனோரமா, தன்னுடைய பயணம் பற்றிய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

‘‘எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் உதவிகள் செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் எய்ட்ஸ் பற்றிய அறியாமை, சிகிச்சைகளில் இருக்கும் சிக்கல் என பல்வேறு பிரச்னைகள் இருப்பதை உணர்ந்து பல தளங்களிலும் செயல்பட ஆரம்பித்தோம். குறிப்பாக, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து 96-97களில் தீவிரமான பணிகளை மேற்கொண்டோம்.

குடிசைப் பகுதிகளில் விழிப்புணர்வு, கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் இடையே எய்ட்ஸ் பற்றி கூறுவது, தெருமுனை பிரசாரங்கள், எய்ட்ஸ் பற்றித் தெரிந்திருக்கிறதா என்று தனிப்பட்ட முறையில் கேள்விகள் கேட்பது என்று பல வழிகளில் பணியாற்றி இருக்கிறோம். பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மூலமாகவும் பிரசாரம் செய்திருக்கிறோம். தங்களுக்குள்ளேயே நோயை வைத்துக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களிடம் இதுவும் ஒரு நோய்தான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி சிகிச்சைகள் எடுக்க உதவிகள் செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி. மையத்துக்குத் தொடர்ந்து செல்கிறார்களா, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்களா போன்றவற்றையும் தொடர்ச்சியாக வீடு தேடிச் சென்று கவனிக்கிறோம். நோயாளிகள் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம் செய்யும் பணிகளையும் செய்து வருகிறோம்.

’’ குழந்தைகள் மீது உங்களுடையகவனம் திரும்பியது எப்படி?

‘‘நான் டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்த 1980களில்தான் எய்ட்ஸ் பற்றி முதன்முதலில் கேள்விப் பட்டேன். ‘வைரஸ் காரணமாக ஏற்படும் ஒரு நோய்’ ‘அமெரிக்கா போன்ற நாடுகளில் ஓரினச்சேர்க்கையால் ஏற்படுகிறது’ என்று நினைத்தோம். படிப்பை முடித்த பிறகு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். ஒருவேளை அவர்கள்தான் தமிழ்நாட்டின் முதல் இரண்டு குழந்தைகளாகவும் இருக்கலாம்.

அப்போது யாரும் இதுபற்றி சரியான தகவல்களை பதிவு செய்து வைக்காததால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.அந்தக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தபோதுதான் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதுதான் எச்.ஐ.வியில் பெரிய பிரச்னை என்பதைப் புரிந்துகொண்டோம். மருத்துவமனையில் மற்ற நோயாளிகளும், ஆயாக்களுமே அந்தக் குழந்தைகள் அருகில் செல்லத் தயங்கினார்கள். கூட்டமாக வந்து அந்தக் குழந்தைகளை வேடிக்கை பார்த்தார்கள். குழந்தைகளை டிஸ்சார்ஜ் செய்தபோது யாருமே கூட்டிச் செல்ல வரவில்லை.

‘நீங்களே வைத்துக் கொள்ள முடியாதா’ என்று கேட்டார்கள். அதன்பிறகு அந்த இரண்டு குழந்தைகளையும் நாங்களே வளர்க்க முடிவு செய்தோம். அதைத் தொடர்ந்து எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏதாவது செய்யலாமே என்ற எண்ணத்தில் முழுநேரமாக செயல்பட ஆரம்பித்தோம்.

’’முறையற்ற பாலியல் உறவுகள் எச்.ஐ.வியில் என்ன பங்கு வகிக்கிறது?

‘‘போதை ஊசிப்பழக்கம், ரத்த தானம், சவரக்கத்தி என்று எய்ட்ஸுக்கு பல காரணங்கள் இருந்தாலும் முறையற்ற பாலியல் உறவுகள்தான் 85 சதவிகிதத்துக்கும் மேல் எய்ட்ஸுக்கு காரணமாக இருக்கிறது. 2005ம் ஆண்டில் முறையற்ற பாலியல் உறவுகள் பற்றிப் பேச ஆரம்பித்த பிறகு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டது. கணவன் – மனைவியைத் தாண்டி மூன்றாம் நபருடனான உறவால் எய்ட்ஸ் வரலாம், தவிர்க்கவே முடியாத பட்சத்தில் குறைந்தபட்சம் ஆணுறையாவது பயன்படுத்துங்கள் என்று கூற ஆரம்பித்த பிறகு எய்ட்ஸின் தாக்கம் குறைந்தது.

’’குழந்தைகளுக்கான இல்லம் நடத்தி வருவது பற்றி…

‘‘ஆரம்பத்தில் வாடகை இடங்களில்தான் குழந்தைகள் இல்லம் நடத்திக் கொண்டிருந்தோம். எச்.ஐ.வி குழந்தைகள் என்று தெரிந்தவுடனே வீட்டைக் காலி செய்யச் சொல்வார்கள். புதிதாக வீடு தர மாட்டார்கள். வீடு கொடுத்தாலும் வாடகை அதிகம் கேட்பார்கள். இதனால் நீதிமன்றம், வழக்கு என்று நிறைய அலைந்திருக்கிறோம்.

2007ம் ஆண்டில் ‘எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஃபவுண்டேஷன்’ எங்களின் செயல்பாடுகள் பற்றித் தெரிந்துகொண்டு விவரம் கேட்டார்கள். நாங்கள் அவர்களிடம் விளக்கிய பிறகு, எங்களுக்கு நிதி உதவி செய்தார்கள். இப்போது திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் ‘ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் எங்களது இல்லம் செயல்பட்டு வருகிறது. 2 ஏக்கர் நிலத்தில் மாணவர்-மாணவிகள் விடுதி, சமையல் கூடம், மருத்துவ வளாகம், நீச்சல் குளம், விளையாட்டு மைதானம், இசைக்கருவிகள் என பல வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. 90 குழந்தைகள் எங்களுடன் இருக்கிறார்கள்.’’

பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

‘‘முன்பு எச்.ஐ.வி குழந்தைகள் 5 வயதைத் தாண்ட மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இன்று எங்களிடம் 23 வயதைத் தாண்டிய குழந்தைகள் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். சிலர் படித்து முடித்து வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். நல்ல பழக்க வழக்கங்கள், சத்தான உணவு, சுகாதாரமான வாழ்க்கை, போதுமான சிகிச்சைகள் கொடுத்தால் எச்.ஐ.வி குழந்தைகளுக்கு வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்பதைத்தான் நாங்களே இப்போது கற்றுக் கொண்டிருக்கிறோம். சாப்பிடும் முன் தவறாமல் கை கழுவுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி, நான்குபேருடன் பழக வைத்து, இசை, விளையாட்டு என்று ஒரு குழந்தை வளரும்போது தானாகவே அந்தக் குழந்தையின் ஆயுள் அதிகமாகிவிடுகிறது.’’

சமூகத்தின் பார்வை எப்படி இருக்கிறது?

‘‘எச்.ஐ.வி நோயாளிகளைத் தவறாகப் பார்க்கும் அபிப்பிராயமும் மாறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒருவருடன் பழகுவதாலோ, விளையாடுவதாலோ, சாப்பிடுவதாலோ எய்ட்ஸ் வந்துவிடாது என்ற புரிதலும் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் யாருக்கும் வரலாம் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நோயாளிகள் சமூகத்தோடு இணைந்து வாழ்வதைப் போல எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களும் வாழ வேண்டும் என்ற எங்களது ஆசை நிறைவேறி இருக்கிறது. வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு வருமாறு எங்கள் குழந்தைகளை அழைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.’’

எய்ட்ஸ் இல்லாத உலகத்தைஉருவாக்க முடியுமா?

‘‘காசநோய், பிளேக், போலியோ, தொழுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்தியதுபோல, எய்ட்ஸையும் பெருமளவு கட்டுப்படுத்தி இருக்கிறோம். அந்த அளவுக்கு அரசாங்கம் நிறைய நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று பலரும் இந்த விழிப்புணர்வு ஏற்பட தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். முன்பு மாதத்தில் 10, 15 நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது ஒன்றிரண்டு பேரைத்தான் பார்க்கிறோம். இதுவே நல்ல முன்னேற்றம்தான். இந்த விழிப்புணர்வு இனியும் தொடர்ந்தால் எய்ட்ஸ் இல்லாத உலகம் எதிர்காலத்தில் சாத்தியமாகும்!’’